வவுனியாவில் அனுமதியை முறைகேடாக பயன்படுத்திய 10 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வவுனியாவில் பயணக்கட்டுப்பாடு நேரத்தில் வீடுகளுக்குச் சென்று பொருட்களை வழங்குவதற்கான அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்திய 10 வர்த்தகர்களுக்கு எதிராகச் சுகாதார பிரிவினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் பயணத்தடை விதிக்கப்பட்டு கோவிட் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
பயணத்தடையின் போது மக்கள் பாதிப்படையாத வகையிலும், மக்கள் ஒன்று கூடுவதினை தடுக்கும் முகமாகவும் நாடுபூராகவும் வீடுகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு வர்த்தக நிலையங்களுக்கும், நடமாடும் வர்த்தகர்களுக்கும் பிரதேச செயலகங்கள் ஊடாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அனுமதிப்பத்திரத்தைப் பெற்று வர்த்தக நிலையத்தினை முழுமையாகத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டமை, ஓர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதாக அனுமதிப் பத்திரம் பெற்று வேறு கிராமங்களில் வியாபாரம் செய்தமை, வேறு தேவைகளுக்கு அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தியமை, வீடுகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதி பெற்று அதனை மேற்கொள்ளாது ஓர் இடத்தில் வாகனத்தினை நிறுத்தி மக்களை ஒன்று கூட்டி வியாபாரம் செய்தமை போன்ற பல முறைப்பாடுகள் சுகாதார பிரிவினருக்குக் கிடைத்துள்ளன.
அதனை தொடர்ந்து பண்டாரிகுளம் சுகாதார பரிசோதகர் வாகீசன், ஈச்சங்குளம் சுகாதார பரிசோதகர் விதுர்சன் தலைமையிலான குழுவினர் பண்டாரிகுளம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது பாஸ் அனுமதிப் பத்திர விதிமுறை மற்றும் பயணத்தடை விதிமுறை ஆகியவற்றினை மீறிச் செயற்பட்ட வர்த்தகர்களின் அனுமதிப் பத்திரம் சுகாதார பிரிவினரினால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக முறைப்பாடு எழுதப்பட்டு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது வர்த்தக நிலைய உரிமையாளர்கள், நடமாடும் வர்த்தகர்கள் என 10 வர்த்தகர்களுக்கு எதிராகவே இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், மக்களை வீட்டிலே பாதுகாப்பாக இருந்து கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தி நாடு வழமைக்குத் திரும்ப ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடம் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா சந்தை சுற்று வட்ட வீதியில்
அனுமதிப்பத்திரமின்றி திறக்கப்பட்ட வர்த்தக நிலையம் பொலிஸாரினால்
மூடப்பட்டதுடன், மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதி பிரபல சுப்பர் மார்கட்
வர்த்தக நிலையமும் பாஸ் அனுமதிப்பத்திர நடைமுறையினை மீறிச் செயற்பட்டதையடுத்து
பிரதேச செயலாளரினால் பாஸ் அனுமதிப் பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுக் குறித்த
வர்த்தக நிலையம் மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



