புறக்கணிக்கப்படும் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுங்கள் - சிவஞானம் சிறீதரன்
விவசாய உதவித்திட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (01.10.2022) அனுப்பிய கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புறக்கணிக்கப்படும் விவசாயிகள்
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் (Food and Agriculture Organization of the United Nations) வடக்கு மாகாணத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஒரு அந்தர் அசேதனப் பசளையும் 30,000 ரூபா நிதியுதவியும், 2.5 ஏக்கருக்குக் குறைவான நிலப்பரப்பில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு அந்தர் அசேதனப் பசளையும் வழங்கும் உதவித் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
கிளிநொச்சியில் வறிய விவசாயிகள் எவருமில்லை
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும், கிளிநொச்சி மாவட்டத்தில் FAO நிறுவனத்தினால் கோரப்பட்டதற்கு அமைவாக வறிய விவசாயிகள் எவருமில்லை என்றும், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் நெற்செய்கையில் ஈடுபடுவதோடு அறுவடையைப் பெறுபவர்களாக உள்ளதாகவும் 2022.02.28 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தவறான உற்பத்தித் தரவுகளே, எமது மாவட்ட விவசாயிகளுக்கான உதவித் திட்டம் நிராகரிக்கப்படக் காரணம் என பாதிக்கப்பட்ட விவசாய அமைப்புக்கள் என்னிடம் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த 2022.10.20 ஆம் திகதி பத்திரிகைச் செய்திகளில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9,971 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பற்றாக்குறையால் பாதிப்பு
அந்தத் தரவுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் அண்ணளவாக நான்கில் ஒரு பகுதியினர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ள சமநேரத்தில், இந்த மாவட்டத்தில் வறிய விவசாயிகள் எவரும் இல்லை என, பொறுப்பற்று சமர்ப்பிக்கப்பட்ட பொய்யான தரவுகளால், ஏற்கனவே எரிபொருளின்மை, உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள எமது மாவட்டத்தின் விவசாயிகள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினரால் எனக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் FAO நிறுவனத்தினால் குறித்துரைக்கப்பட்டதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தின் 10 கமநல சேவை நிலையங்களின் கீழும் வறுமையிலுள்ள விவசாயிகளில், ஒரு ஏக்கருக்கு குறைவான நிலப்பரப்பில் 1,523 விவசாயிகளும், 1 - 2.5 ஏக்கருக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் 6,237 விவசாயிகளும் இவ்வருடம் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தரவுகள்
இது தொடர்பில் 2022.02.08 ஆம் திகதிய மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் தொடர்புடைய அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் தவறானவை என தாம் சுட்டிக்காட்டியிருந்தபோதும் அதற்கு உரிய தரப்பினர் செவி சாய்க்கவில்லை என இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மாவட்டத்தின் முதுகெலும்புகளாக உள்ள எமது விவசாயிகள் மேலும் பாதிக்கப்படாத வகையில், முறையான தரவுகளை மீள சமர்ப்பிப்பதன் மூலம், மேற்படி உதவியைப் பெற தகுதியிருந்தும் நிராகரிக்கப்பட்டுள்ள 7,760 விவசாயிகளுக்கும் இதர உதவித் திட்டத்தைப் பெற்றுக்கொடுக்க செய்யுமாறு கோரியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
