லெபனானை பகடைக் காயாக ஈரான் பயன்படுத்தக் கூடாது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தனது மோதலில், போரினால் பாதிக்கப்பட்ட லெபனானை ஈரான் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், லெபனானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெய்ரூட்டில் உள்ள அதிபர் மாளிகையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அதிபர் ஜோசப் அவூன் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே நடக்கும் போரைக் கண்டு லெபனான் மக்கள் "வெறுத்துப் போய்விட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
லெபனானுக்குள் ஒரு தனி அரசாங்கம் போலவே செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போதைய சூழலில் ஊசலாடிக்கொண்டிருக்கும் வேளையில் அதிபர் இந்த அதிரடி நேர்காணலை வழங்கியுள்ளார்.
ஈரான் எங்களுக்கு உதவ முயற்சிக்கவில்லை. ஈரானின் சொந்த சுயநலத்திற்காக லெபனான் நாட்டு மக்கள் பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
லெபனானின் தேசிய நலன்களும், ஈரானின் நலன்களும் ஒருபோதும் ஒன்றாக முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் முக்கிய இராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை நோக்கி, "இது உங்கள் நாடு அல்ல, இது எங்கள் நாடு" என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இதனை அதிபர் ஜோசப் அவூன் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். அமெரிக்காவுடனான தங்களின் பேச்சுவார்த்தையில் அவர்கள் லெபனானை ஒரு பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள் எனுவும் இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதிபர் ஜோசப் அவூன் கூறியுள்ளார்.