செளபாக்கியா உற்பத்தி கிராம களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் எண்ணக்கருவில் உருவான செளபாக்கியா செயற்திட்டத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் சௌபாக்கியா உற்பத்தி கிராம களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் பல்வேறுபடட பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன.
மன்னார்
மன்னர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பெரிய மடு கிராமத்தில் குறித்த நிகழ்வு இடம்பெறுள்ளது.
இவ்வடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக 11.4மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. ஸ்ரான்லி டிமெல் , மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமாரன், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன், திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சங்கானை
சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் வறுமை ஒழிப்பு செயற்றிட்டமானது, நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அங்கஜன் இராமநாதனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உற்பத்தி கிராமத்தில் ஏற்கனவே பால் உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் அந்த உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக 10 மில்லியன் ரூபா அங்கஜன் இராமநாதனால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சங்கானை பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர், அப் பிரிவு கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், குறித்த பால்ச்சங்க பொது முகாமையாளர், கால்நடை வைத்தியர், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிறிவிற்குட்பட்ட வாகரை கட்டுமுறிவு கிராமத்தை உற்பத்திக் கிராமமாக வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
மண் வளமும், நீர் வளமும், அப்பகுதியில் ஒருமித்துக் காணப்படுவதனால் கௌப்பி, நிலக்கடலை போன்ற பயிர் செய்கைகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் அங்குள்ள மக்கள் முன்னெடுத்துள்ளார்.
இதன் போது பாரிய அளவான உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்குச் சௌபாக்கிய திட்டத்தின் மூலமாக நீர் இறைக்கும் இயந்திரங்களையும் மேலும் சில கடன் உதவிகளையும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்திருந்தார்.
இவ்வாறான உள்ளூர் உற்பத்தி மற்றும் சுய பொருளாதாரத்தினை கட்டி எழுப்புவதன் மூலம் எதிர்காலத்தில் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த ஒரு ஆரோக்கியமான வளமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.










