சட்டத்தரணிகள் இலச்சினையை வாகனங்களில் இருந்து அகற்ற சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பு
வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள சட்டத்தரணிகள் இலச்சினையை அகற்றுவது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
வாகனங்களின் கண்ணாடிகளில் வருமான சான்றிதழ் தவிர வேறு எந்தவொரு இலச்சினையும் ஒட்டமுடியாது என்றொரு விதியை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது.
கடும் எதிர்ப்பு
அதன் பிரகாரம் வாகனங்களின் முன்புற கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள சட்டத்தரணி, மருத்துவர் தொழில்களுக்கான இலச்சினைகளும் அகற்றப்படவுள்ளன.
இந்நிலையில் சட்டத்தரணிகளுக்கான இலச்சினைகள் வாகனங்களில் இருந்து அகற்றப்படுவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
சட்டத்தரணிகளுக்கான இலச்சினை வாகனங்களில் ஒட்டப்பட்டிருப்பதன் ஊடாக அவர்களை நீதிமன்றம் உள்ளிட்ட சட்டத்துறை சார் இடங்களில் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சட்டத்தரணிகள் சங்கம்
அத்துடன் சிற்சில அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் உட்பிரவேசிப்பதற்கு குறித்த இலச்சினை பெரும் உதவியாக இருப்பதுடன், பொலிசாரும் குறித்த இலச்சினை கொண்ட வாகனங்களை அவ்வாறான இடங்களில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் சட்டத்தரணிகளுக்கான இலச்சினையை வாகனங்களில் இருந்து அகற்றும் செயற்பாட்டை தாம் கடுமையாக எதிர்ப்பதாக சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸ் மாஅதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.



