பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் சட்டங்கள் - கடுமையாகும் தண்டனைகள்
பிரித்தானியாவில் 2022ஆம் ஆண்டிற்கான புதிய சாரதிகள் சட்டங்களும் விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கம் நெடுஞ்சாலைக் குறியீட்டை மாற்றியுள்ளமையினால், சைக்கிள் ஓட்டுபவர்கள், குதிரை சவாரி செய்பவர்கள் மற்றும் பாதசாரிகள் சாலையில் பாதுகாப்பாக உணர முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
நெடுஞ்சாலைக் குறியீட்டு மாற்றத்தால் பாரியளவு விபத்துக்களை தவிர்க்க முடியும் என பிரித்தானிய அரசாங்கம் நம்புகின்றது.
இதேவேளை, வாகனம் ஓட்டும் போது கையடக்க தொலைபேசி பாவனையை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் வாகனத்திற்குள் தொலைபேசியில் பேசுதல் குறுந்தகவல் அனுப்புவது போன்ற விடயங்களுக்காக மாத்திரமே அபராதம் விதிக்கப்பட்டது. எனினும் புதிய சட்டங்களுக்கமைய கையடக்க தொலைபேசியை தொட்டாலே அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சிக்கிக்கொள்ளும் சாரதிகளுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் நிலையில் சாரதி அனுமதி பத்திரத்தில் 6 புள்ளிகள் குறைக்கப்படும். எனினும் வாகனத்திற்குள் கையடக்க தொலைபேசி பொருத்துவதற்கு உள்ள இடத்தில் பொருத்தி பதிலளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நடைபாதையில் நிறுத்தும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்க இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள நகர சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா முழுவதும் இவ்வாறு நடைபாதையில் வாகனம் நிறுத்தினால் 70 பவுண்ட் அபாராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2022 ஆம் ஆண்டில், அனைத்து புதிய கார்களிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயமாக்கப்படடுள்ளது.
இதேவேளை, முழுமையான பாதுகாப்பு மதிப்பாய்வுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்மார்ட் மோட்டார் பாதைககளை அரசாங்கம் இடைநிறுத்துகிறது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையாளர்களிடமிருந்து கடவுசீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் அகற்றப்படலாம் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்த வருடம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இது சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைச் சமாளிப்பதற்கான 10 ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது