தொடர் சிக்கல்களிலிருந்து தப்புமா இலங்கை அரசு?
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்ற கதையாகியுள்ளது இன்றைய இலங்கை அரசாங்கத்தின் நிலைமை.
ஒரு பக்கம் ஜெனீவாவில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், மறு பக்கத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கையால் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக விவாதத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் சர்வதேசத்தை நாடப்போவதாக பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்ததன் பின்னணிலேயே அறிக்கை குறித்த விவாதம் இடம்பெற்றிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தூண்டிய காரணங்கள், அது முன்னெடுக்கப்பட்ட விதம், அதன் இலக்குகள், நிதி கிடைத்த வழி வகைகள் உட்பட உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.
இந்த தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைவருக்கு எதிராக உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படுவதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
தாக்குதலுடன் தொடர்புடைய 676 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 200 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 66 பேர் தடுப்பு உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள். பிணையில் விடுவிக்கப்பட்டோரும் விசாரிக்கப்படுகிறார்கள். தாக்குதலுடன் தொடர்புடைய 54 வெளிநாட்டவர்கள் 5 நாடுகளின் உதவியோடு கைது செய்யப்பட்டார்கள். இதற்கு மேலதிகமாக தாக்குதலுடன் தொடர்புடைய 3 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் தேசியக் கல்விக் கொள்கைக்கு முரணான சகல பாடசாலைகளும் தடை செய்யப்படவிருக்கின்றன. மதரஸா பாடசாலைகளை கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இயங்கும் 11 தீவிரவாத அமைப்புகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.
இதன் பின்னர் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விவகாரத்தை தமிழர் பிரச்சினையுடன் இணைத்து அவதானம் செலுத்தியிருந்தது.
இதன்போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கையை சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்குள் சர்வதேச விசாரணையை கத்தோலிக்க மக்கள் எதிர்பார்க்கின்ற நிலையில், தமிழ் மக்கள் இதற்கென 11 வருடங்களாக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறலை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசு தவறியதாலேயே தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை கோருவதாகவும் இன்று பேராயர் ரஞ்சித் ஆண்டகையும் அதேநிலைப்பாட்டிற்கு வருவதற்கு அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
