இலங்கையின் வீசா கட்டணங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஆசிய பிராந்திய வலயத்தில் வீசா கட்டணம் மிகவும் அதிகமான நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைசார் அமைப்புக்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளன.
தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட ஏனைய பல ஆசிய நாடுகளை விடவும் இலங்கையில் வீசா கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.
சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு
இதனால் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு தரப்புக்கள் கூட்டாக இணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு(Ranil Wickremesinghe) கடிதம் அனுப்பி வைத்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்கு இலகுவானதும் போட்டித்தன்மை மிக்கத்துமான வீசா முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளன.
கடந்த காலங்களில் காணப்பட்ட ஈ.ரீ.எ ((Electronic Travel Authorization) ) முறைமை போன்றதொரு இலகுவான சுற்றுலா வீசா பெறும் முறைமையை மீண்டும் அறிமுகம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வீசா முறைமையில் நிலவும் குளறுபடிகள் விலை அதிகரிப்பு போன்றன சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு இடையூறாக அமையும் எனவும் இலக்கினை எட்ட முடியாத நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
100 டொலர் வீசா கட்டணம் அறவீடு
சுற்றுலாப் பயணி ஒருவரின் வீசா கட்டணம் 100 டொலர்கள் வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று வீசா பெற்றுக்கொள்ள 400 டொலர் செலவிட நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வீசா முறைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைசார் தொழில்களில் ஈடுபட்டு வரும் பல்வேறு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |