இலங்கைக்காக உதவி கோரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர்களின் மனிதாபிமானம்
அதற்கமைய, மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் கூட்டுத் திட்டம் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான நான்கு மாத காலப்பகுதியில் இலங்கைக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்கு இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
47 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
அதற்கமைய, மனிதாபிமான உதவியாக 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தகவல் ஒன்றை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர்.
உதவி செய்ய விரும்புவோர் இணைப்பின் மூலம் நன்கொடைகளை வழங்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.