உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வழக்கு
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணிகளின் தலைவர்களான சரித் அசலங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைவர் நீதியரசர் M.T.M. லாஃபர் மற்றும் நீதியரசர் K.P. பெர்னாண்டோ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவில், இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தேசிய கிரிக்கெட் வீரர்கள் இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனத்தின் ஊழியர்களாக கருதப்படுவதை எதிர்த்தும், இந்தத் தீர்மானத்தை ரத்து செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மெத்தீவ்ஸ், மஹீஷ் தீக்ஷண, பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் உள்ளிட்ட 38 தேசிய கிரிக்கெட் வீரர்கள், இந்த மனுவை ஆதரித்து கையொப்பமிட்டுள்ளனர்.
மனுதாரர்கள் சார்பாக, "கிரிக்கெட் வீரர்கள் பாரம்பரியமாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் சுதந்திர சேவை வழங்குநர்களாகவே கருதப்பட்டுள்ளனர்.
அவர்களை ஊழியர்களாகக் கருதுவது சட்டவிரோதமானது" என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், SLC மற்றும் வீரர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் ஒரு வருட காலத்திற்கே செல்லுபடியாகும் என்பதாலும், ஒப்பந்த புதுப்பிப்பு தொடர்பாக எந்த உறுதியும் இல்லாத காரணத்தினால் வீரர்களை ஊழியர்களாக வகைப்படுத்துவது தவறானது என விளக்கப்பட்டது.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை மற்றும் பதிலளிப்பு உரைகள் எதிர்வரும் 28 ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
மனுதாரர்களின் சட்டத்தரணிகளாக நிஷான் சிட்னி பிரேமதீரத்ன, ஷெனாலி டயஸ், சிதத் கஜயனக ஆகியோர் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
சிறிலங்கா கிரிக்கெட்டின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சொய்சா மற்றும் அவரது குழு முன்னிலையாகியிருந்தது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சார்பில், துணை சொலிசிட்டர் ஜெனரல் மனோகார ஜயசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.