நானுஓயாவில் மண் மற்றும் கற்பாறைகள் சரிவு - ஏழு குடும்பங்கள் இடம்பெயர்வு
நானுஓயா - உடரெதல்ல மேற்பிரிவு தோட்டத்தின் குடியிருப்பு பின்புறத்தில் உள்ள மலையிலிருந்து பாரிய மண்மேட்டுடன் கற்பாறைகள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் வாழும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு
குறித்த குடியிருப்புகளின் பின்னால் இருந்த கற்பாறைகள் மண்மேடோடு சரிந்துள்ளது, எனினும் குடியிருப்புகளில் இருந்த எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
நானுஓயா உடரெதல்ல மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த (19) சனிக்கிழமை அதிகாலை முதல் இன்று (23) வரை சிறிது சிறிதாக மண்மேடுடன் கற்பாறைகள் சரிந்து வீடுகளுக்கு அருகில் இருந்த ஆட்டுத் தொழுவத்தில் விழுந்ததால் ஆடு ஒன்று இறந்துள்ளதுடன், ஆட்டுத் தொழுவமும் கடுமையாக சேதமாகியுள்ளது.
கற்பாறைகள் சரிவு
தொடர்ந்தும் மழையுடன் காலநிலை நீடிக்கும் பட்சத்தில் குறித்த பகுதியில் மண்மேட்டுடன் கற்பாறைகள் சரிந்து விழுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் சிறு பிள்ளைகளை வைத்துக் கொண்டு மழை காலங்களில் உயிர் அச்சத்துடன் வாழ்வதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.




