தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் காணிகள் அபகரிப்பு: இரா.சாணக்கியன்
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒற்றுமையில்லை என பொதுவான கருத்து உள்ளது, எனினும் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளைச் செய்யும் போது அதனை விமர்சிக்காமலோ அதனைச் சுட்டிக்காட்டாமலோ இருக்க வேண்டும் என்றால் அந்த ஒற்றுமைக்கு நான் இணங்கமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன் தினம் (12.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் வரும்போது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நாம் அதனை எதிர்க்க வேண்டும். தமிழ் மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டுமே தவிர தனிப்பட்ட விடயங்களுக்காக நாம் அரசியல் செய்யக்கூடாது.
எல்லைக் கற்கள் இடுகை
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 26 இடங்களுக்கு எல்லைக் கற்களை இடுவதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் மாவட்ட செயலகம், மற்றும் பிரதேச செயலகத்திற்கும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் 3 இடங்களுக்கு எல்லைக் கற்கள் இடுவதாகவும், அடுத்து வரும் 15 நாட்களுக்குள் ஏனைய இடங்களுக்கும் எல்லைக் கற்களை இடுவதாகவும், அறிய முடிந்துள்ளது.
தமது பூர்வீக வழிபாட்டுத்தலங்களில் எல்லைக் கற்கள் இடுவதை மக்கள் இதன்போது எதிர்த்துள்ளார்கள்.
இதற்காக தொல்லியல் திணைக்களத்தின் அம்பாறை காரியாலயத்திலிருந்து, பண்டார எனும் அதிகாரியுடன் மேலும் 2 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் வருகை தந்திருந்தனர்.
அவர்களின் தவல்களுக்குமைய 10 தொடக்கம் 15 இலட்சம் ரூபாய் நிதி இப்பகுதிக்கு எல்லைக் கற்கள் இடுவதங்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இவ்வருடம் முடிவதற்குள் இந்த நிதியை செலவு செய்ய வேண்டும் என மேலிடத்திலிருந்து பெரிய அழுத்தம் இருப்பதாக வருகை தந்த அதிகாரி தெரிவித்தார்.
இதனை நாம் அனுமதிக்க முடியாது. தொல்பொருள் என்பதை இலங்கையில் பாதுகாக்க வேண்டும் ஆனால் தொல்பொருள் என்ற பேர்வையில் சிங்கள மயமாக்களையும், அபகரிப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் கடந்த காலங்களில் அவதானித்திருக்கின்றோம்.
குருந்தூர் மலையிலே தொல்பொருள் என்ற போர்வையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பௌத்த மயமாக்கலுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவையிலே தொல்லியல் பிரதேசத்திலே சிவன் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது.
காணி அபகரிப்பு
குருந்தூர் மலையிலே பௌத்த விகாரை கட்டமுடியும் என்றால் ஏன் பொலன்னறுவையில் உள்ள சிவன் ஆலயத்தை கட்டியெழுப்ப முடியாது? இது தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் காணிகளைப் பறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் முயற்சி.
இது குறித்து தொல்லியல் திணைக்கள அதிகாரியிடம் பேசி அந்த 15 லட்ச ரூபாய் இந்த மாவட்டத்திற்கு வேண்டாம், என தெரிவித்துள்ளோம். அதற்கு அவர்களும் இணங்கியுள்ளார்கள்.
எதிர்வரும் தைப் பொங்கலுக்குப் பின்னர் அப்பகுதி மக்களிடமும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம் எனக் கூறி அவர்களை அனுப்பியுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்கினால் தெரிவு செய்யப்பட்டவர்களும் தொல்லியல் திணைக்களத்திற்கு ஆதரவாக செயற்படுவது கவலையான விடயமாகும்.
மக்கள் பிரதிநிதிகளின் பணி
இம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு தெற்கினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க போன்றோரின் இனவாத அரசியலுக்காக எமது மாட்டத்திலும் ஒன்றாக இராஜாங்க அமைச்சர்களாக பயணிக்கின்றவர்கள் செயற்படுவது மிக கவலையான விடயமாகும்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒற்றுமையில்லை என பொதுவான கருத்து உள்ளது.
இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளைச் செய்யும்போது அதனை விமர்சிக்காமலோ அதனைச் சுட்டிக்காட்டாமலோ இருக்க வேண்டும் என்றால் அந்த ஒற்றுமைக்கு நான் இணங்கமாட்டேன்.
தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் வரும்போது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நாம் அதனை எதிர்க்க வேண்டும்.
தமிழ் மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டுமே தவிர தனிப்பட்ட விடயங்களுக்காக நாம் அரசியல் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
