நிலமற்ற இனமாக பாலஸ்தீனர்களைப் போல் சொந்த நிலத்தில் வாழ்வதற்கு தள்ளப்படுவோம் : மா.சத்திவேல்
நிலமற்ற இனமாக பாலஸ்தீனர்களைப் போல் சொந்த நிலத்தில் வாழ்வதற்கு தள்ளப்படுவோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் இன்று (19.03.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சக்திகள்
மேலும், “இலங்கையின் தொல்லியல் திணைக்களம் வடக்கு கிழக்கில் பேரினவாத திணைக்களமாக இனவாத அரசியல் செய்வதை தீவிரப்படுத்தி உள்ளது.
குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளை மீறி பௌத்த சமயவாத பிக்குகள் இராணுவத்தின் துணையுடன் பௌத்த விகாரை கட்டுவதை அனுமதித்துள்ளது. அங்கும் கட்டுமானத்தின் போது தொல்லியல் பொருட்கள் நாசப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதனை தடுத்து நிறுத்துவதற்கான பாரிய பொறுப்பு தமிழரின் தேசியம் பேசும் அனைத்து அரசியல் சக்திகளிடத்திலும் உள்ளது.
1940களில் குடியேற்ற திட்டத்துடன் ஆரம்பித்த பௌத்த சிங்கள மயமாக்கல் தற்போது நேரடியாகவும் மறைமுகமுமான குடியேற்றத் திட்டங்களை உருவாக்கவும் தமிழர்களின் மரபுரிமை பேசும் வரலாற்று இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்கவும் எடுக்கின்ற முயற்சி தடுப்பதற்கு அனைத்து அரசியல் தலைமைகளும் கூட்டு செயல்பாட்டிற்கு இணைவது காலத்தின் கட்டாயமாகும்.
இல்லையேல் நிலமற்ற இனமாக பாலஸ்தீனர்களைப் போல் சொந்த நிலத்தில் வாழ்வதற்கு தள்ளப்படுவோம்.
இன அழிப்பின் செயல்பாடு
இன்று ஜனாதிபதி இராணுவம் கையகப்படுத்தி இருக்கும் காணிகளில் ஒரு சில ஏக்கர்களை விடுவித்துக் கொண்டு பல ஆயிரம் ஏக்கர் காணிகளை கையாகப்படுத்தும் ஆக்கிரமிக்கும் இனவாத தொல்லியல் திணைக்களத்திற்கு ஆதரவு வழங்கி அமைதி காப்பது அவரது நரித்தனத்தை வெளிப்படுத்துகிறது.
தற்போது இந்து தமிழ் பக்தர்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள இன அழிப்பின் செயல்பாடு தமிழ் கிறிஸ்தவர்களுக்கு எதிராக திரும்பும் காலம் தூரத்தில் இல்லை என்பதை கிறிஸ்தவ மத தலைமைகளும் உணர்தல் அவசியம்.
இந்நிலையில், கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டு சமய நல்லிணக்கத்திற்கு கரம் சேர்த்து
மக்கள் சக்தி உருவாக களத்தில் செயற்பட வெளிவரல் வேண்டும்” எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |