காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் துணைபோகிறதா! ஆளும் தரப்பு விளக்கம்
அநீதியான முறையில் காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் துணைபோக மாட்டாது. வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு காடழிப்பு தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பணிப்புரை வழங்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (06.07.2025) இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "மக்களது கோரிக்கைக்கும், முறைப்பாட்டுக்கும் அமைய வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் உளள வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள திரிவைத்தகுளம் என்ற பகுதியில் திட்டமிடப்பட்ட காடழிப்பு இடம்பெறுகின்றது என்ற முறைப்பாட்டுக்கு அமைய நான் நேரடியாக கலாபோகஸ்வேவ பொலிசார், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டோம். பாரியளவில் திட்டமிடப்பட்ட வகையில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது.
அனுமதி
இதன்மூலம் 35 - 40 ஏக்கர் காடு முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. மகாவலி எல் வலய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களால் இது தொடர்பில் எந்தவித அனுமதியும் எவருக்கும் வழங்கவில்லை எனத் தெரிவித்தனர்.
அவர்களுக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் பொலிசாருக்கு முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். வனவளத் திணைக்களத்திடம் கேட்ட போது அவர்களும் அனுமதி வழங்கவில்லை என்றனர்.
வனவளத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையினர் இணைந்து இது தொடர்பாக பரிசோதனை நடத்தவுள்ளனர். ஒரு வாரத்திற்குள் இது தொடர்பான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், அதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறும் பணிப்புரை வழங்கியுள்ளேன்.
முன்னாள் அரசாங்கத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருடைய தலைமையில் இக் காடழிப்பு இடம்பெற்றதாக அப் பகுதி மக்கள் எமக்கு கூறியுள்ளனர்.
உரிய நடவடிக்கை
இது தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இது தொடர்பில் எமது அரசாங்கம் தெளிவாகவுள்ளது. இந்த நடவடிக்கை இரண்டு வாரத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக நினைக்கின்றேன்.
பாரிய மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாது. இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெறாத வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச அதிகாரிகளிடம் பணிப்புரை வழங்கியுள்ளோம். எப்பொழுதும் மக்கள் நலன் சார்ந்தே எமது அரசாங்கம் செயற்படும். இங்கு இடம்பெற்ற முறைகேடான செயற்பாட்டுக்கு விரைவாக தீர்வு வழங்கவுள்ளோம்.
இதனை நாடாளுமன்றக் கூட்டத்திலும் தெரியப்படுத்தி வனவளத்துறை அமைச்சரிடம் நேரடியாக சமர்பித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோருவோம். மக்களுடைய காணிகள் எதுவாக இருந்தாலும் இவ்வாறு அநீதியான முறையில் கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் துணைபோக மாட்டாது.
இதைப் பயன்படுத்தி பொருத்தமற்ற அரசியல் நடவடிக்கைகளை செய்வதை தவிர்க்க வேண்டும். எலலோரும் ஒன்று சேர்ந்து காடுகளை பாதுகாக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றால் உடனடியாக எமக்கு தெரியப்படுத்தவும். நாம் நடவடிக்கை எடுப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.






ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
