ஜனாதிபதி நிதியத்தில் உதவி பெற்ற அரச தரப்பினர் : பெயர்களை வெளியிட்ட மொட்டுக் கட்சி
ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி நிதி உதவி பெற்றுள்ளதாக மொட்டு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிஹால் கலப்பத்தி
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நான் அவரை குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. ஏனென்றால் அவர் 1994 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு வந்தவர். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் மனையின் சுகயீனம் காரணமாகவே நிதி உதவி பெற்றுக் கொண்டுள்ளார்.
வசதி படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக் கொண்டதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டடேன். இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

நான் 26 வருடங்கள் நாடாளுமன்றத்தில் இருந்தேன் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. அவ்வாறு செய்ய எமக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
ஆனால் வசதியற்ற ஒரு உறுப்பினர் தனது சுகயீனத்துக்காக பெரும் தொகை பணம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நிதியத்தில் உதவி பெறுவதற்கு ஒரு நாட்டின் பிரஜை என்ற வகையில் அவர் செய்த சேவையை பொறுத்து அவருக்கு தகுதி உண்டு.

ஆனால் வசதி படைத்தவர்கள் உதவி பெற்றுக் கொள்வதை நான் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் 2024 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்கள் எடுத்துள்ளனர்.
ஆனால் அவர்களின் பெயர்களை அரசாங்கம் வெளியிடாமல் மற்றையவர்களின் பெயர்களை மட்டுமே வெளியிட்டது. அதனாலே அரச தரப்பினரின் பெயர்களை வெளியிட்டேன்.
அடுத்து வரும் காலங்களில் ஏனைய உறுப்பினர்களின் பெயர்களையும் வெளியிடுவேன் என்றார்.