திருகோணமலையில் வீதி சமிக்ஞை விளக்குகள் இல்லாமை – பொதுமக்கள் கவலை
திருகோணமலை நகரில் வீதி சமிக்ஞை விளக்குகள் இல்லாததனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதாக வீதிப் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளதாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்துள்ளார்.
நேற்று(22.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடும் போக்குவரத்து நெரிசல்
அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மாகாணத்தின் தலைநகரமாக விளங்கும் திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட பல முக்கிய அரச அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இதனால் மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்து தினசரி அரச அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் நகரத்திற்குள் வருகை தருகின்றனர்.

குறிப்பாக காலை அலுவலக நேரம், மாலை பணிநிறைவு நேரம் மற்றும் பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் நகரின் முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
இந்த சூழலில் போக்குவரத்தை கட்டுப்படுத்த பொலிசார் கடுமையாக முயற்சித்தாலும், போக்குவரத்து அழுத்தம் அதிகமாக இருப்பதால் அதை முழுமையாக சமாளிப்பது சிரமமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதி சமிக்ஞை விளக்குகள்
மேலும், கிழக்கு மாகாணத்தின் பல சிறிய நகரங்களில்கூட வீதி சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணத்தின் தலைநகரமாகவும் மாநகர சபையாகவும் தரமுயர்த்தப்பட்ட திருகோணமலையில் இந்த வசதி இல்லாதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகரின் முக்கிய சந்திகளில் வீதி சமிக்ஞை விளக்குகள் நிறுவ வேண்டும்.
பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் இந்த அடிப்படை வசதி அவசரமாக ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7