ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடனப்படுத்தியமைக்கு தொழிற்கட்சி நன்றி தெரிவிப்பு
ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்கும் தீர்மானத்தைத் தொழிற்கட்சி முதன்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் லண்டன் சட்ட சபையினால் (London Assembly) ஒருமனதாக நிறைவேற்றியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் சார்பில் தொழிற்கட்சி தலைவர் சென். கந்தையா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மகத்தான சாதனைக்காக அனைத்து லண்டன் சட்டசபை உறுப்பினர்களுக்கும், தமிழர்களுடன் சேர்ந்து நின்று தொடர்ந்து ஆதரவளித்து வரும் தொழிற்கட்சியின் தலைமைத்துவத்துடன் கூடிய அனைத்து செயற்பாடுகளிற்கும் இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இவ்வாறான முன்னேற்றங்கள் இருப்பினும், இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் நீதியினைப் பெற்றுக்கொள்வதற்குத் தடையாகவுள்ள, பழமைவாதக் கட்சியை பெரும்பான்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தை நாம் இன்னும் எதிர்கொண்டுள்ளோம்.
தமிழர்கள் அனுபவித்த இனப்படுகொலைக்கு நீதியை நிலைநாட்டவோ அல்லது இலங்கையில் தமிழர்களைத் தொடர்ந்து ஒடுக்கிவரும் கொடூரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவோ இந்நிர்வாகம் தயாராகவில்லை என்பதை நிரூபித்துள்ளது.
இனப்படுகொலையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்குமாறு நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம்.
ஆனால் பழமை வாதக்கட்சி அரசாங்கம் இதுவரை போர்க்குற்றம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிவில் அல்லது இராணுவ அதிகாரிக்குக் கூட தடைவிதிக்க மறுத்துவிட்டது.
அமெரிக்க அரசாங்கம் இலங்கை இராணுவத்தினருக்குப் பயணத் தடை விதித்துள்ளதைப் போன்று, போர்க்குற்றவாளிகளிற்குத் தடை செய்யக் கோரும் எங்கள் கோரிக்கைக்கு பிரித்தானியாவும் செவிசாய்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
காணாமல் ஆக்கப்பட்ட அல்லது காணாமல் போன தமது அன்பிற்குரிய உறவுகளைத் தேடி 1800 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் போராடிவரும் தாய்மார், தந்தையர், சகோதர, சகோதரிகளை நாம் நினைவுகூர வேண்டிய தருணம் இதுவாகும்.
கடந்த 13 வருடங்களாகப் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றின் கொடிகளை ஏந்தி உலக நாடுகளின் உதவியோடு தங்களிற்கு உரிய பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தாயக வீதிகளில் வரிசையாக நிற்கின்றனர்.
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்காசிய மற்றும் பொது நலவாய நாடுகளிற்கான அமைச்சரும் ஐ.நா.வும் இந்த முக்கிய விடயங்களை முன்வைத்து இலங்கையிடமிருந்து பதில்களைக் கோருவதற்கான நேரம் இதுவாகும்.பிரித்தானிய அரசாங்கம் 2022 ஆண்டினை "மனித உரிமைகள் ஆண்டு" ஆக அறிவித்துள்ளது.
எனவே குறிப்பாகத் தமிழர்கள் மீதான தொடர்ச்சியான சித்திரவதைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் மனித உரிமைகளுக்கான பிரிட்டனின் உறுதிப்பாட்டை அமைச்சர் நிலைநிறுத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம்.
மிக மோசமான அரச வன்முறைக்கு வழிவகுத்த மற்றும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மீது சித்திரவதை மற்றும் காணாமல் ஆக்கப்பட வழிவகுத்த அந்த கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இலங்கை ரத்து செய்யுமாறு அமைச்சர் கோர வேண்டும்.
இந்தச் செய்தி எங்கள் அரசாங்கத்தைச் சென்றடையும் என்று நம்புவதோடு, மனித உரிமை
மீறல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அரசு தலைமையிலான இனப்படுகொலை
ஆகியவற்றிலிருந்து தப்பிய தாயத்திலுள்ள மற்றும் பிரித்தானியாவிலுள்ள தமிழர்கள்
சார்பாக அவர்கள் இப்போது செயல்படுவார்கள் என்றும் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.