குறிஞ்சாக்கேணி படகு விபத்து: நகரசபை தலைவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமுக்கு திருகோணமலை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (10) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 23ம் திகதி குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இழுவைப் படகு கவிழ்ந்ததில் ஏற்கனவே 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிண்ணியா பொலிஸாரினால் இழுவை படகில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் நான்காவது சந்தேக நபராகக் குற்றம் சுமத்தப்பட்ட கிண்ணியா நகர சபை தவிசாளரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த தவிசாளர் சுகவீனமுற்ற நிலையில் மாத்திரைகளைப் பாவித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளரை பிணையில்
விடுவிக்குமாறும் எதிர்வரும் 16ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதிமன்ற
நீதவான் பயாஸ் ரசாக் உத்தரவிட்டுள்ளார்.