குருந்தூர் மலையில் நீதிபதி முன்னிலையில் வழிபாட்டினை மேற்கொண்ட பௌத்த துறவிகள்!(Video)
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர்கள் கள ஆய்வினை மேற்கொண்டிருந்த வேளை, குருந்தூர் மலையில் பௌத்த மதகுருமார்கள் வழிபாடுகளை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்வையிட்ட நீதிபதி உடனடியாக வழிபாடுகளை நிறுத்தகோரி பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
நீதிபதியின் உத்தரவு தொடர்பில் பொலிஸார் பௌத்த மதகுருமாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து குருந்தூர்மலை விகாரையில் மேற்கொள்ளப்பட்ட வழிபாடுகளை பௌத்த மதகுருமார்கள் நிறுத்தியுள்ளனர்.
கஜேந்திரன் குற்றச்சாட்டு
பௌத்த மதகுருமாரின் செயற்பாடு தொடர்பில், தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்கள்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்,
“குருந்தூர் மலையினை ஒரு பௌத்த ஆலயமாக மாற்றி அதனை தங்களின் கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கத்தில் தான் இவ்வாறன செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்று நீதிபதி அங்கு விசாரணைகளை மேற்கொண்டு இருக்கின்ற பொழுதே நீதிமன்றத்தின் உத்தரவுகள் எதனையும் மதிக்காமல் எட்டு பிக்குமார்கள் வந்தார்கள்.
அவர்களை சரத்வீரசேகர கால்களில் தொட்டு வணங்கினார். அவர்கள் கொண்டு வந்த பூக்களுடன் விகாரையில் ஏறினார்கள். வணக்க நிகழ்வுகளில் ஈடுபட்டார்கள்.
வடக்கு கிழக்கில் நீதிமன்றங்கள் எதை சொன்னாலும் கணக்கில் எடுக்கப்போவதில்லை, தாங்கள் நினைப்பதைதான் செய்வோம் என்கின்ற செய்தியினைத்தான் அவர்களின் நடவடிக்கை ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்கள்." என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |