நெல் சேர்த்துக் கட்டிய குமுழமுனை முத்தையன் சந்திப்பிள்ளையார் கோவில்
மகத்தான சிந்தனைகளோடு மக்கள் வாழ்ந்து வருவதனை அறிந்து கொண்டால் மனதில் தோன்றும் வாழ்வின் மீது பெருமதிப்பு.
விவசாயிகளிடம் நெல் சேகரித்து கோவில் கட்டிய ஒற்றுமைமிகு மக்கள் கூட்டமாக வாழும் வாழ்வை குமுழமுனையில் அவதானிக்க முடிந்தது.
குமுழ் மரங்களைக் கொண்டதால் குமுழமுனை
குமிழ் மரங்களை அதிகம் கொண்டு நாயாற்று கடல் நீரேரியினுள் நீட்டிக் கொண்டிருக்கும் நிலப்பகுதியை கொண்ட ஊர் குமுழமுனை என அந்த ஊரின் முதுசங்களிடம் பேசிய போது அறிய முடிந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுழமுனை என்ற ஊரின் குடிகளில் மகத்தான சிந்தனைகள் பரவியிருப்பதை தேடிய போது பேசும் படியான ஆச்சரியங்கள் பல இருப்பதனை அறிய முடிந்தது.
பல கவிஞர்களை, எழுத்தாளர்களை, கலைஞர்களை, வீரமிகு மனிதர்களை கண்ட பூமி தான் குமுழமுனை. வன்னியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியனின் படைகள் முகாமிட்டு பயிற்சி பெற்ற மண்.
மதயானையை வென்ற மாதரசி அரியாத்தையின் வாழ்விடம். அரியாத்தையின் கதையை முதன்முதலில் நாடக வடிவில் எழுதி அரங்கேற்றி புகழ் பெற்ற தெய்வேந்திரம்பிள்ளை உடையார் பிறந்த மண்.
முச்சந்தி பிள்ளையார் கோயில்
தண்ணீரூற்று குமுழமுனை பிரதான வீதியில் குமுழமுனையில் இருந்து ஆரம்பமாகும் தண்ணிமுறிப்பு குமுழமுனை வீதியும் அளம்பிலிருந்து குமுழமுனையை இணைக்கும் வீதியும் குமுழமுனையின் மேற்குப் பகுதியில் சந்திக்கின்றன. இவை இணைந்து ஆறுமுகத்தான்குளம் வீதியை ஆரம்பிக்கின்றன.
இந்த வீதிகளின் சங்கமிப்பாலான சந்தி முத்தையன் சந்தி என அழைக்கப்படுகிறது. சந்தியில் உள்ள பிள்ளையார் கோவில் முத்தையன் சந்தி பிள்ளையார் கோவில் என அழைக்கப்படும். வயல் விவசாயிகளின் விருப்பத்துக்குரிய ஆலயமாக இது விளங்குகிறது.முத்தையன் சந்திப் பிள்ளையார் முச்சந்திப் பிள்ளையார் என நாளடைவில் பெயர் மாறிப் போயுள்ளது.
முத்தையன் உடையாரால் வைத்து வணங்கப்பட்டதால் இந்த ஆலயம் முத்தையனின் பிள்ளையார் என்று அழைக்கப்பட்டு பின்னர் முத்தையன் பிள்ளையார் ஆகிட அந்தச் சந்தியும் முத்தையன் சந்தி என அழைக்கப்படலாயிற்று.
மூன்று வீதிகள் சந்திப்பதால் இது தற்போது முச்சந்தி எனவும் இங்குள்ள பிள்ளையார் கோவில் முச்சந்தி பிள்ளையார் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.
கோவில் கட்டுவதற்கு நெல் சேர்த்த முறை
தண்ணிமுறிப்பு வயல்களில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தங்களின் அறுவடையான நெல்லை இவ்வழியாக கொண்டு செல்லும் போது முச்சந்தி பிள்ளையார் கோவில் திருப்பணிக்காக நெல் சேகரித்தல் குழுவை உருவாக்கி நெல்லை அவர்களிடமிருந்து சேகரித்தனர்.
பின்னர் அந்த நெல்லை விற்றுப் பெற்ற பணத்தைக் கொண்டு ஆலயத்தின் கட்டிடத்தினை கட்டி முடித்தனர். கோவிட் - 19 தாக்கத்திற்கு முன்னதாக இந்த முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.
கிடுகு கொட்டிலில் இருந்த பிள்ளையார் கோவிலை சீமெந்து கட்டடத்தினால் மாற்றிக்கொள்ள விரும்பி அதனை செய்து முடிப்பதற்கு நெல் சேகரிப்புக்குழுவை உருவாக்கினோம்.
நெல் சேகரிப்பு முறை 1970 களில் குமுழமுனை மக்களிடையே இருந்ததாக இந்த திருப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் குறிப்பிட்டார்.
மகத்தான மக்களின் முயற்சி
ஆரம்பம் காலம் முதலே கிராம அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தின் உதவிகளை பெற காத்திருக்காது தங்கள் கிராம கட்டுமானப் பணிகளை தாங்களே முன்னெடுத்து வந்த பழக்கம் இந்த ஊர் மக்களிடம் இருந்துள்ளமையை அறிய முடிகிறது.
விக்னேஸ்வரா கலாமன்றத்தை உருவாக்கி கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி நிதி திரட்டி கொட்டுக் கிணற்று பிள்ளையார் ஆலயத்தின் (தலைவெட்டி பிள்ளையார்) கட்டுமானங்களை மேற்கொண்டதாக குமுழமுனையில் வாழ்ந்து வரும் வைத்தியர் சாபா அவர்களோடு உரையாடிய போது அவர் குறிப்பிட்டார்.
விக்னேஸ்வரா கலாமன்றத்தை தங்கள் பாடசாலைக் காலத்தில் உருவாக்கியதாகவும் அதனை தங்கள் ஆசிரியர் வழி நடத்திய தாகவும் மேலும் குறிப்பிட்டார். அதன் சம காலத்தில் கண்ணன் கலாமன்றமும் தொடங்கப்பட்டு சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இது நெல் சேகரிப்பு குழுக்களின் தோற்றத்தை பின்பற்றிய பழக்கமாக இருந்திருக்கலாம். தற்போதும் குமுழமுனையில் நெல் சேகரித்து அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபட்டுவருவதனை அவதானிக்க முடிகின்றது.
இந்த அபிவிருத்திக்கான முயற்சிகளில் தன்னார்வ ஆதரவாளர்களது பங்களிப்புக்களும்
பெற்றுக் கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.