யாழில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் நிகழ்வு! (Photos)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் (Kumar Ponnambalam) நினைவேந்தலும், நினைவுப்பேருரையும் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாலை 4.30 மணியளவில் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு குமார் பொன்னம்பலத்தின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணிகளான சுகாஸ், காண்டீபன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குமார் பொன்னம்பலம் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி கொழும்பு, வெள்ளவத்தை - இராமகிருஷ்ண வீதியில் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணி அணியும் குமாருக்கு அஞ்சலி
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்துக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணியும் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளது.
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றாகும்.
இதையடுத்து யாழ்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இடமொன்றில் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியினர் குமாரின் உருவப்படத்துக்குச் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.