மாமனிதர் குமார்பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவுதினம்
மாமனிதர் குமார்பொன்னம்பலத்தின் 25 வது நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது, இன்று வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் அனுஸ்டிக்கப்பட்டது.
மாலை அணிவிப்பு மலரஞ்சலி
அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாகவுள்ள உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அவரது, படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம்
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை யாழ். கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது .
இதன் பொழுது முதன்மை நிகழ்வாக மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வனும் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் நினைவு உரைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி தீபன்
மட்டக்களப்பு
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு இந்தியா துணைநிற்குமானால் வடகிழக்கு தமிழர்கள் இந்தியாவுக்கான ஆதரவினை நூறு வீதம் வழங்குவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஓய்வு நிலை அதிபர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குககுமார் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நினைவுச்சுடர் தேசிய அமைப்பாளரால் ஏற்றப்பட்டதுடன் கட்சி உறுப்பினர்களினாலும் பொதுமக்களினாலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஆத்மசாந்திக்காக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
செய்தி - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |