அரசுக்கு ஒரு சிவப்பு எச்சரிக்கை! குமார் குணரத்தினம் சுட்டிக்காட்டு
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெறுபேறுகள் மூலம் மக்கள் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதனால் மக்களின் எச்சரிகையைப் புரிந்துகொண்டு அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (12.05.2025) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு எச்சரிக்கை
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு நாட்டு மக்கள் சிவப்பு எச்சரிக்கை ஒன்றைடுத்திருக்கின்றனர். இந்தத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் எதுவும் இடம்பெறப்போவதில்லை. அதனால் கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசின் நடவடிக்கை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை மக்கள் வழங்க வேண்டும் என்றே போராட்ட அணியாகத் தெரிவித்து வந்தோம்.
தேர்தல் பெறுபேறுகளைப் பார்க்கும்போது மக்கள் எமது கோரிக்கைக்கு ஓரளவு செவிசாய்த்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அரசு கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் தெரிவித்த விடயங்களை மறந்து புதிய தாராளவாத கொள்கையில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. மக்கள் எதிர்கொண்டுள்ள வரிச் சுமையைக் குறைப்பதாகத் தெரிவித்த வாக்குறுதியை மறந்து நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மேலும் அதிகரித்துள்ளது.
பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுகாதார உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி ஒரு சதமேனும் குறையவில்லை. மக்கள் விராேதமாக நாட்டின் பொருளாதாரச் சுதந்திரத்தை இந்தியாவுக்குக் காட்டிக்கொடுக்கும் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருக்கின்றது. அந்த ஒப்பந்தங்களை இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை. இவர்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் கடுமையாக எதிர்த்து வந்த அரச அடக்குமுறையை இன்று போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து வருகின்றனர்.
அரசின் மீது இருந்த நம்பிக்கை
இவ்வாறான நிலைமையிலே இந்தத் தேர்தல் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தி சகோதரர்கள் தேர்தல் மேடைகளில் கடந்த அரசுகளுக்கு எதிராக மேற்கொண்டு வந்த கடும் எதிர்ப்பு மற்றும் அரசியல் விமர்சனத்துடனே மக்கள் அவர்களின் பால் அணி திரண்டனர். என்றாலும் இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெறுபேறுகளைப் பார்க்கும்போது அரசின் மீது இருந்த நம்பிக்கை இல்லாமல் போய் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளைவிட இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 23 இலட்சம் வாக்குகள் குறைவடைந்துள்ளது. எனவே, இந்தத் தேர்தல் பெறுபேறு மூலம் மக்கள் வழங்கிய எச்சரிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு காரணங்களைத் தெரிவித்து அரசு மக்களின் எச்சரிக்கையைத் தட்டிக்கழிக்க முற்பட்டால் அதன் பாதிப்பு அரசுக்கே ஏற்படும்.
ரணில் விக்கிரமசிங்க செயற்படுத்திய மக்களை அழுத்தத்துக்கு ஆளாக்கும் நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தையே அரசு முன்னெடுத்துச் செல்வதால், அரசின் மீது மக்களுக்கு விரக்தி ஏற்படுள்ளது. அதனால் நாட்டு மக்கள் வழங்கிய எச்சரிக்கையைப் புரிந்து கொண்டு, அவர்கள் வேகமாகப் பயணிக்கும் புதிய தாராளவாத வேலைத்திட்டத்தை மாற்றியமைக்க அரசுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கின்றது.
தீர்மானம் எடுக்கும்போது பொதுமக்களின் பால் இருந்து தீர்மானங்களை எடுப்பதற்கு தற்போதும் அரசுக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு அரசை கேட்டுக் கொள்கின்றோம்." - என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
