நுவரெலியா மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி - மீண்டும் காட்சி கொடுத்த புத்தர்
நுவரெலியாவில் நிலவிவரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக, நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கியிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடதொர விஹாரையின் புத்தர் சிலை மீண்டும் காட்சி கொடுக்க ஆரம்பித்துள்ளது.
மலையகத்தில் தற்போது நிலவும் அதிக வறட்சியான காலநிலை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
பிராந்தியத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதுடன், அன்றாடத் தேவைகளுக்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

நவதிஸ்பனே மற்றும் கட்டுகொல்ல பகுதிகளில் இருந்து பாயும் நீர் ஓடைகளே கொத்மலை ஓயா மற்றும் மாக்கந்துர கால்வாய் ஊடாக நீர்த்தேக்கத்தை சென்றடைகின்றன.
எனினும், தற்போது அந்த நீரோடைகள் அனைத்தும் வறண்டு போயுள்ளதுடன், சில நீர்வீழ்ச்சிகள் முற்றாகச் சிதைந்து பாறைகள் வெளியே தெரிகின்றன.
கடும் வறட்சி
கட்டுகொல்ல, ஹுணுகல் ஓயா, நவதிஸ்பனே, கிரிமெட்டியாவ மற்றும் ஹரங்கல போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காகவும், பிரதான வாழ்வாதாரமான தேயிலை மற்றும் மரக்கறி செய்கைக்காகவும் இந்த நீர் ஆதாரங்களையே நம்பியுள்ளனர்.

நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாயத்திற்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.