கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தேர்த்திருவிழா
கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் மேளதாள இசைமுழங்க யானைகள் சிரம் தாழ்த்தி வணங்க தேர்ப்பவனி இன்று (24) காலை ஆரம்பமானது.
விநாயகர் வழிபாடு, திராவிய அபிசேகம், அலங்காரப்பூஜை, வசந்த மண்டப பூஜை, ஆகியன இடம்பெற்று அம்பிகை உள்வீதி வலம் வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள்பாளிக்க ஆலயத்திலிருந்து புறப்பட்டது.
அபிசேக பூஜை
குறித்த தேர்பவனியில் யானைகள் அணிவகுக்க மேளதாள இசைமுழங்க கலைக்கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மாசிமக மகோற்சவத்தை முன்னிட்டு பால்குட பவனியும் நேற்று ரொசிட்டாபாம் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பாலாபிசேகங்கள் இடம்பெற்று விசேட அலங்கார அபிசேக பூஜைகள் இடம்பெற்றன.
நாளை (25) தீர்த்தோற்சவமும் நாளை மறுதினம் (26) பூங்காவனமும் இடம்பெற்று வைரவர் மடையுடன் எதிர்வரும் 26ஆம் திகதி இந்த தேர்த்திருவிழா நிறைவு பெறவுள்ளது.
குறித்த தேர்த்திருவிழாவில் பிரதேசத்திலுள்ள பக்த அடியார்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலாசார உடையில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.