குளத்திற்குள் இறங்கி தமது அன்றாட பயணங்களை மேற்கொள்ளும் மக்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இராமாவில் கிராம சேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராம சேவகர் பிரிவை எல்லைப்படுத்தும் வீதியினை தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையினால் மக்கள் குளத்திற்குள் இறங்கி தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக குறித்த பகுதி மக்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதுடன்,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது வீதிக்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் வீதியை தனியார் சிலர் தமது காணி என தெரிவித்து குளத்துடன் இணைத்து வீதியையும் மறித்து வேலியினை
அடைத்துள்ளனர்.
இதன் பிரகாரம் தனியார் காணிக்காரர்கள் வீதியை மறித்தும் குளத்தின் ஒரு பகுதியை இணைத்தும் தமது எல்லையை இட்டுள்ளனர். இதனால் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,இவர்கள் பாரிய வெள்ளத்தின் மத்தியில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீதியானது சாவகச்சேரி பிரதேச சபை வீதி வரைபடத்தில் குறியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



