புன்னையடி இழுவைப் படகு சேவையின் அபாயம் குறித்து பிரதேச சபை அவசர விஜயம்!
திருகோணமலை மாவட்டத்தில், வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட புன்னையடி மக்களின் உயிர் அச்சுறுத்தலான இழுவைப் படகு சேவைப் பாதையினை வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச உறுப்பினர்கள் நேற்று (10) நேரில் சென்று பார்வையிட்டனர்.
வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் இந்த ஆபத்துமிக்க புன்னையடி இழுவைப் பாதையினைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பாடசாலை மாணவர்களும் தங்களின் கல்வியைத் தொடர அச்சத்துடன் இப்பாதையூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
புன்னையடியில் பாலம் இல்லாமையினால், சுமார் 60 மீற்றர் தூரத்தை மக்கள் அச்சத்துக்கு மத்தியில் இழுவைப் படகு மூலம் கடந்து செல்கின்றனர்.

கள விஜயத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தவிசாளர் எஸ். கருணாநிதி, மிக முக்கியமானதொரு கோரிக்கையை முன்வைத்தார்.
"இவ்வருடம் வரவு செலவுத் திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அண்மையில் இடம்பெற்ற கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்து போன்று இன்னுமொரு துயரமான விபத்து இங்கு இடம்பெறுவதற்கு முன்னர், புன்னையடியில் உடனடியாகப் பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களின் உயிரைப் பணயம் வைக்கும் இப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
அவர், இந்த முக்கியமான பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
புன்னையடி மக்களின் நீண்டகாலக் கனவான பாலத்தை அமைப்பதன் மூலமே இந்தப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாடப் பயணத்தை அச்சமற்றதாக மாற்ற முடியும்.