கிண்ணியா நகர சபையின் மீன் சந்தை வருமானம் தனிப்பட்டவர்களினால் அபகரிப்பு
கிண்ணியா நகர சபையின் மீன் சந்தை வருமானம் தனிப்பட்டவர்களினால் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.
கிண்ணியா நகர சபையில் இன்று (12)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கிண்ணியா நகர சபையானது புதிதாக அமையப்பெற்றதன் பின்னர் மக்களுக்கு பவ்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவற்றை அடையாளப் படுத்தி செயற்படுத்துவதற்கும் அவற்றை நிறைவேற்றுவதற்கும் நிதிப் பற்றாக்குறை தடையாக இருக்கின்றது.
குத்தகை வருமானம்
மேலும் வழமையான கழிவு அகற்றல், ஹோட்டல் கழிவுகளை அகற்றல், மின் குமிழ்களை பழுது பார்த்தல் போன்ற பணிகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் நகரசபையின் அனைத்து செயற்பாடுகளும் முடங்க வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் நிரந்தரமாக்கப்பட்ட ஊழியர்களுக்கான மொத்த சம்பளத்தையும். ஏனைய சபையின் நிரந்தர உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான மொத்த மாதாந்த சம்பளத்தில் 20 வீத சம்பளத்தையும் சபையே வழங்க வேண்டுமென்ற புதிய நிர்பந்தமும் இருக்கின்றது.
கிண்ணியா நகர சபைக்கு வருமானத்தை பெற்றுத் தருவதில் மீன் சந்தை குத்தகை பாரிய பங்களிப்பை செய்து கொண்டிருக்கின்றது. நாளாந்தம் நாற்பது தொடக்கம் நாற்பத்து ஐயாயிரம் ரூபா வரையிலான வருமானத்தை பெற்றுத் தரக்கூடிய மீன் சந்தை குத்தகை வருமானம் 2025ம் ஆண்டின் ஜனவரி 01ந் திகதியிலிருந்து இது வரை ஒரு சதமேனும் கிடைக்கவில்லை.
குறித்த அந்த நகர சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானமானது தனிப்பட்ட சிலரினதும் மீனவ சங்கத்தினதும் கட்டுப் பட்டின் கீழ் சட்டத்திற்கு முரணாக அவர்களால் வசூலிக்கப்படுகின்றது. கிண்ணியா நகரசபைக்கு கிடைக்க வேண்டிய அந்தப் பணம் ஏனையோரின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன எனவும் தற்போதேனும் அவற்றுக்கான நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்திவும் தொடரும் எனவும் அவரால் கூறப்பட்டது.
பொதுமக்களால் முறைப்பாடு
பொது மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தப்பட வேண்டிய வரிப் பணமானது முறையற்ற விதத்தில் தனிப்பட்டவர்களின் கைகளுக்கு செல்வதானது சட்ட விரோத செயற்பாடுகளாகும் என்பதனால் அவற்றைத் தடுத்து நிறுத்தி வருமானத்தை நகர சபைக்கு பெற்றுக் கொள்வதற்காக தொழிலாளர் மற்றும் சபை உறுப்பினர்களால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
12 கடற்றொழில் சங்கங்களுக்கு பொதுவான கிண்ணியா மீனவர்களுக்கான ஓய்வு மண்டபத்தை குறிப்பிட்ட ஒரு மீனவ சங்கம் அது தமக்குரியது என தனி உரிமை கோருவதோடு அதனை நகரசபையின் அனுமதியின்றி தனிப்பட்டவர்களால் மீன் சந்தை நடாத்தப்பட்டும் வருகின்றது.
ஏனைய 11 கடற்றொழி்ல் சங்கங்களையும் ஓரங்கட்டி விட்டே இந்த முறைகேடுகள் நடைபெறுகின்றன. இவ்வாறான முறைகேடுகளுக்கு மீன் பிடி திணைக்களமும் துணை போகின்றதா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன. வெளி பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்ற மீன்களில் பாவனைக்கு உதவாத மீன்களும் விற்கப்படுவதாக பொதுமக்களால் முறைப்பாடுகளும் செய்யப்படுகின்றன.
அம் முறைப்பாட்டுக்கு அமைய கொண்டு வரப்படுகின்ற அனைத்து மீன்களும் பொது சுகாதார வைத்திய அதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் உள்ளூராட்சி அதிகார சபைக்கு கிடைக்க வேண்டிய வரிப்பணத்தை பெற்றுக் கொள்வதற்கு 11 மீனவ சங்கங்களும் வியாபாரிகள் சங்கமும் இணக்கம் தெரிவிவித்திருக்கின்றன.
எனவே இதுகுறித்து முறையற்ற விதத்தில் தனி நபர்கள் கையகப்படுத்தும் குறிப்பிட்ட நிதியை நகர சபைக்கு கிடைக்க செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |