கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவை படகு விபத்து : இருவர் கைது
கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவை படகு விபத்தின் போது வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பிரதான சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவை படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் அங்குள்ள இளைஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
இதன் போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது மாத்திரமன்றி ஊடகவியலாளர்களை தாக்கியதுடன் அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளையும் திருடிச் சென்றனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தநிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று (10) திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.