யாழ்., கிளிநொச்சி அரச அதிகாரிகளுக்கு மிரட்டல்! - டக்ளஸ் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அரச அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின் பெயரால் மிரட்டல் விடுப்பதாகவும், அழுத்தம் கொடுப்பதாகவும் பல முறைப்பாடுகள் எனது கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றது. இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின் பெயரால் அவரின் இணைப்பாளர்கள் எனப்படுவோர் மிரட்டல் விடுக்கின்றனர் எனவும், அழுத்தம் கொடுக்கின்றனர் எனவும் பல முறைப்பாடுகள் எனது கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.
அவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருக்கு தெரிந்து நடக்கின்றதா, தெரியாமல் நடக்கின்றதா என்பது தொடர்பாக அவருடன் கலந்துரையாடவுள்ளேன். அவருக்குத் தெரியாமல் நடக்குமாக இருந்தால், இவ்வாறான அநாகரிகமான செயலை அவர் கட்டுப்படுத்த வேண்டும்.
மாறாக,அவருக்கு தெரிந்துதான் அரச அதிகாரிகளுக்கான மிரட்டலும், அழுத்தங்களும் அவரது இணைப்பாளர்களால் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசி முடிவொன்றைக் காண்பேன்.
யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கிளிநொச்சி அதிகாரிகளிடமும் அழுத்தங்கள் பிரயோகித்திருக்கின்றனர். எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை யாழ். மாவட்ட அரச அதிபரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு ஆலோசனை கூறியிருக்கின்றார்கள். ஆனால், சிரேஷ்ட அதிகாரியான கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் யாருடைய ஆலோசனையையும் கேட்கும் அவசியம் தனக்கு இல்லை என்று தகுந்த பதில் அளித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்களால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டு சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பிராகவும், சிரேஷ்ட அமைச்சராகவும் இருக்கின்ற என்னை இந்த மக்களிடம் இருந்து சண்டித்தனத்தால் பிரித்துவிட முடியாது. நான் தூரத்தே இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு அதாவது ஒரு பொம்மையாக இருந்துவிட்டு அரசியலுக்குள் வரவில்லை. பல நெருப்பாறுகளைக் கடந்தே தமிழ் மக்களின் அரசியலுக்குள் வந்தவன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
