கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் திரைமறைவில் சதி.. முன்வைக்கப்படும் கோரிக்கை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் சுமார் ஐயாயிரத்து 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய சிகிச்சை பிரிவினை உடனடியாக இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளர் நலன்புரி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றைய தினம் (22.08.2025) கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை வளாகத்தில் மேற்கொண்ட ஊடக சந்திப்பிலேயே மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில், நெதர்லாந்து அரசினுடைய நிதியொதுக்கீட்டின் கீழ் சகல வசதிகளையும் கொண்ட 160 இற்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கான படுக்கை வசதிகளை கொண்ட பெண் நோயியல் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டடது.
குற்றச்சாட்டுக்கள்
இருப்பினும், குறித்த பிரிவு இன்றுவரை இயங்காத நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையில் உள்ள சில வைத்திய உபகரணங்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் திரை மறைவில் மேற்கொள்ளப்படுவதாகவும் இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சுகாதார உயர் மட்டங்களிலும் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான தேவை கருதி நவீன வசதிகளுடன் கூடிய இந்த பெண் நோயியல் வைத்திய சாலையை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் குறித்து, இன்று நோயாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் க.விஜயசேகரன் ஊடக சந்திப்பை மேற்கொண்டு இருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் வைத்தியசாலையிலுள்ள பெண்நோயியல் சிகிச்சைப்பிரிவை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இங்கிருந்து மருத்துவ உபகரணங்களை மாற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் அதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.




