கொழும்பில் நடந்த பயங்கரம் - சிறுவர்கள் மீது மோதிய கார் - சிறுமி பலி - சாரதி தொடர்பான தகவல்
கொழும்பு, மஹாபாகே பகுதியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் மீது வாகனத்தை மோதிவிட்டு தப்பி சென்ற சாரதி பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார்.
இந்த விபத்தில் ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் சாரதியை கைது செய்வதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்து கடந்த 5 ஆம் திகதி மாலை 4.20 மணியளவில் மஹாபாகே பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
கார் விபத்து
பொலிஸாரின் தகவலுக்கமைய, காரை ஓட்டிய ஓட்டுநர், மோட்டார் சைக்கிள் ஒன்றை துரத்தி வந்துள்ளார்.
பின்னர் வீட்டின் முன் விளையாடிய சிறுவர்கள் மீது மோதியுள்ளார். கார் சுவர் மீது மோதி நின்ற நிலையில், சாரதி வாகனத்திலிருந்து இறங்கி தப்பியோடியுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த ராகம, வெலிசறை பகுதியை சேர்ந்த 5 வயதான எலிசா ஜஸ்டின் ஹேமன் என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த சிறுவர்களாக 6 வயதுடைய டினோன் சித்மா பெர்னாண்டோ மற்றும் 3 வயதுடைய அனுகி ரிசித்மா பெர்னாண்டோ ஆகியோர் சிகிச்சைக்காக ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பழி தீர்க்கும் முயற்சி
தப்பியோடிய காரின் ஓட்டுநரை அடையாளம் கண்டுள்ள நிலையில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அயல் வீட்டு நபருடன் நீண்ட காலம் ஏற்பட்ட மோதலையடுத்து அவரை கொலை செய்யும் முயற்சியில் அதிக வேகத்தில் குறித்த காரை ஓட்டி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற அயல் வீட்டு நபரை கொலை செய்வேன் கூறி அவரை காரில் துரத்தி சென்றுள்ளார். இதன் போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.