முல்லைத்தீவில் மண்ணில் புதைக்கப்பட்ட 715 லீற்றர் மண்ணெண்ணை மீட்பு (VIDEO)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றிலிருந்து காணியில் புதைக்கப்பட்ட நிலையில்,7 பெரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணை மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது கடந்த 31.05.2022 அன்று நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பெரல்கள் இனம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டமைக்கு அமைய 20.06.2022 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமைய குறித்த பகுதியினை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் பொலிஸ் அதிகாரிகள்,படை அதிகாரிகள்,கிராம சேவையாளர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது நிலத்தில புதைக்கப்பட்ட 7 பெரல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதில் எரிபொருட்கள் இருப்பது இனம்காணப்பட்டுள்ள நிலையில், அவை மண்ணெண்ணை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவ்வாறு 7 பெரல்களிலும் 715 லீற்றர் மண்ணெண்ணைய் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.