மன்னாரில் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது
மன்னார் - இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூராய் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் கல்பிட்டி பகுதிக்கு கொண்டு செல்ல முயற்சித்த 131 கிலோ 725 கிராம் ,கேரள கஞ்சா போதைப்பொருள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்கவின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி I.P.அசங்க,உதவி பொலிஸ் பரிசோதகர் ராமநாயக தலைமையிலான அணியினரே மேற்படி கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்திய கூலர் வாகனம் மற்றும் 2 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் கல்பிட்டி பகுதியை சேர்ந்தவர்களாவர். மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கூலர் வாகனம் என்பன மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.
கைப்பற்றபட்ட கேரள கஞ்சா மூன்று கோடியே ஐம்பது லட்சத்துக்கு அதிகம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது .



