கீரிமலை சிவன் கோவில் இடித்து அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைப்பு! சைவ மக்கள் கடும் கண்டனம்
கீரிமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை கடற்படையினர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று ஆலயத்தின் தற்போதைய நிலையை பார்வையிட்ட போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கீரிமலை சிவன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் கதிரவேலு நாகராசா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, ஆலயத்தின் வசந்த மண்டபம் முழுமையாக இடித்து தள்ளப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பகுதிகள் உள்ளதாகவும், ஆலய விக்கிரகங்களில் பிள்ளையார், முருகன் என்பனவற்றை காணவில்லையெனவும், அருகில் இருந்த மிக பழமைவாய்ந்த சிவன் ஆலயம் காணப்பட்ட இடத்தில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கீரிமலையில் இருந்த ஆதிசிவன் ஆலயம் இடித்து அழிக்கப்பட்ட செய்தி சைவ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார்.
கீரிமலையில் போர்த்துக்கீசர் காலத்தில் அமையப்பெற்ற ஆதிச்சிவன் ஆலயத்தின் ஆன்மீக அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு ஆடம்பர மாளிகை அமைக்கப்பட்டுள்ளமை சைவ மக்களின் நெஞ்சம் தாங்க மறுக்கின்றது.இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.இவற்றை மீள அமைக்க வேண்டும் என்பதுடன், அந்த ஆலயங்களில் வரலாற்று சின்னங்கள் இருந்த இடங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவற்றினை அழித்தமைக்கும் எமது வன்மையான கண்டனங்களையும் நாம் பதிவு செய்கின்றோம் என்றும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.