கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு நிலை: கடும் கோபமடைந்த பயணிகள்
நேபாளத்தின் காத்மாண்டு நகருக்கு நேற்று காலை செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தின் பயண நேர அட்டவணை இரத்து செய்யப்பட்டதால் சுமார் 200 பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியதுடன் கடும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கையினால் விமானம் தாமதமாக புறப்பட்டதாக பயணிகள் மத்தியில் இருந்த இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் விமானங்கள் தாமதமாக வருவது தொடர்பில் பலத்த சர்ச்சை எழுந்துள்ள பின்னணியில் நேற்று ஸ்ரீலங்கன் விமான சேவை ஒன்று இரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான சேவைகள் தாமதம்
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தாமதம் தொடர்பில் நாட்டில் பல நாட்களாக பேசப்பட்டு வருகின்றது.
2 நாட்களுக்கு முன்பு விமான சேவைகள் தாமதமானது, அங்கு விமான நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் காணொளிகள் வேகமாக பரவியது.
பல விமானங்களில் ஒரே நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இன்றைய இரத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோபத்தில் பயணிகள்
UL 181 என்ற விமானம் நேற்று தாமதமானது. நேற்று காலை 8.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேபாளத்தின் காத்மாண்டு நோக்கி விமானம் புறப்படவிருந்தது.
காலை 07.15 மணியளவில் பயணிகள் ஏற்றப்பட்டனர், ஆனால் 11.00 மணி வரை விமானம் புறப்படவில்லை. தாமதத்தால் மிகவும் சிரமத்திற்கு ஆளான பயணிகள் குழப்பமடைந்து கோபத்தை வெளிப்படுத்திய சில காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேறு விமானம் வழங்கப்படும் என்று கூறியதாகவும், அதுவும் நடக்கவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டினர்.
பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான நிலையத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால், பல மணி நேரம் தாமதமானதால் விமானம் இரத்து செய்யப்பட்டது.
விமான போக்குவரத்து
நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து சேவைக்கு களங்கம் ஏற்படுத்தும் இந்த விமான தாமதங்கள் குறித்து துறைமுக கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விசாரிக்கப்பட்டது.
விமான தாமதங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சில் நடைபெறவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் இதில் இணைந்து கொள்ள உள்ளனர்.