விஜயிடம் மூடிய அறைக்குள் தொடுக்கப்படும் கேள்விகள் : சுற்றிவளைத்துள்ள சிபிஐ அதிகாரிகள்
புதிய இணைப்பு
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது சிபிஐ அதிகாரிகள் மூன்று முக்கிய கேள்விகளை விஜய்யிடம் எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கேள்விகள் கடுமையானவை மற்றும் முக்கியமானவை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய கேள்விகள்
முதல் கேள்வி, ‘நீங்கள் ஒரு திறந்த வாகனத்தில் நின்று கொண்டிருந்தீர்கள், கூட்டத்தில் மக்கள் மயங்கி விழுவது தெளிவாகத் தெரிந்தும், நீங்கள் உங்கள் பேச்சைத் தொடர்ந்தது ஏன்?’ என கேட்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கேள்வி, ‘சிலர் மயங்கி விழுந்தபோது, நீங்கள் கூட்டத்திற்குத் தண்ணீர் பாட்டில்களை விநியோகித்துக் கொண்டிருந்தீர்கள், அப்படியிருந்தும் இந்த விஷயத்தில் ஏன் எந்த உடனடி நடவடிக்கையும் எடுக்கவில்லை?’ என கேட்டுள்ளனர்.
மூன்றாவது கேள்வி, ‘நீங்கள் ஏன் சரியான நேரத்தில் கூட்ட இடத்திற்கு வரவில்லை? உங்கள் தாமதம் கூட்டத்தில் அமைதியின்மையையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியது. இது உங்கள் அரசியல் அதிகாரத்தைக் காட்டும் செயலா?’ எனவும் கேட்கப்பட்டுள்ளது.

7 மணி வரை விசாரணை தொடரலாம்
இதேவேளை, கரூர் பேரணியின் ஏற்பாடுகள், திட்டமிடல், பொலிஸாருடனான ஒப்பந்தங்கள், கூட்டக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
மேலும், பேரணியின் செலவுகள், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆராய சிபிஐ திட்டமிட்டுள்ளது.
டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய்யிடம் இரவு 7 மணி வரை விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் இணைப்பு
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரச சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
100 கேள்விகளை கேட்க சிபிஐ திட்டம்
இதன்போது விஜயிடம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருவதுடன், விஜய்யிடம் 100 கேள்விகளை கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

இன்று காலை 11.30 மணியளவில் முன்னிலையான விஜய்யிடம் மாலை 5 வரை விசாரணை நடத்தப்பட உள்ளதுடன், விஜய்யிடம் கேட்கப்படும் கேள்விகள், அவர் அளிக்கும் பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து வருகின்றனர்.
விஜய்யிடம் விசாரணை நடைபெறும் அதே நேரத்தில் பிரசாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் 8 பேரிடம், கரூரில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
கரூர் சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கரூர் பிரசாரத்திற்கு தாமதமாக வருகை தந்தமைக்கான காரணம், அனுமதி வழங்கப்பட்ட நேரம், கரூரில் என்ன நடந்தது என்பன தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
கரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஜனவரி 12) காலை முன்னிலையாகவுள்ளார்.
இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்ற அவர் அங்கிருந்து 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி பொலிஸார் கூடுதல் பாதுகாப்பு
இவருடன் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக விஜய் வருகையை ஒட்டி சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி வரும் தவெக தலைவர் விஜய்க்கு போதிய பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மூன்று அடுக்கு பாதுகாப்பு
ஏற்கனவே விஜய்க்கு மத்திய அரசின் ”ஒய்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதனுடன் டெல்லி பொலிஸார் கூடுதல் பாதுகாப்பை வழங்கவுள்ளனர்.
இதனை தவிர விஜய்யின் தனி பாதுகாவலரும் இருப்பதால் மூன்று அடுக்கு பாதுகாப்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் இடத்தில் இருந்தே விஜய்க்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்க தொடங்கியுள்ளதுடன், இவர் செல்லும் காருக்கு முன்பும், பின்பும் டெல்லி பொலிஸாரின் வாகனங்கள் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri