வெருகல் படுகொலையின் பிரதான காரணகர்த்தா கருணாதான்:முன்னாள் எம்.பி பகிரங்கம்
வெருகல் படுகொலை ஏற்பட பிரதான காரணகர்த்தா கருணாதான் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று (11) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நேற்று(10) வெருகல் படுகொலையின் 21, வது ஆண்டு நினைவு தினம் இடம் பெற்றதாகவும் அதில் முதல் தடவையாக கருணா கலந்துகொண்டார் எனவும் ஊடகப்பரப்பில் செய்திகள் வந்தன.
வெருகல் படுகொலை
இந்த மோதல் ஏற்பட பிரதான காரணகர்த்தா கருணாதான். 2004, மார்ச்,03 இல் விடுதலைப்புலிகளில் இருந்து தாம் விலகிவிட்டதாக ஊடகத்தில் கருணா அறிவித்தார்.
2004, மார்ச்,06 இல் விடுதலைப்புலிகளில் இருந்து கருணாவை நீக்கிவிட்டதாகவும், அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் ஊடகங்களில் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
அதன்பின்னர் தாம் கிழக்குப்புலிகள், வன்னிப்புலிகள், என்ற பிரதேசவாதக்கருத்தை கருணாதரப்பினர் பரப்பி மட்டக்களப்பு நகர்பகுதி, செங்கலடி பகுதி எங்கும் யாழ்ப்பாண வர்தர்கள், யாழ் பொதுமக்கள் மீது பிரதேசவாதக்கருத்தை பரப்பி அவர்களை வெளியேற்றும் காடைத்தனத்தை புரிந்தனர்.
2004,ஏப்ரல்,04, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடியும் வரை விடுதலைப்புலிகள் கருணா குழு மீது எந்த நடவடிக்கையையும் செய்யவில்லை. 2004, ஏப்ரல்,09, இரவு தொடக்கம் 2004, ஏப்ரல்,10, வரை வாகரைக்கும், வெருகல் பாலத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் கருணாதரப்பை சேர்ந்த போராளிகள் சிலர் உயிரிழந்தனர்.
2004, ஏப்ரல்,20, இல் கிளிநொச்சியில் தலைமைச்செயலகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலானாய்வுப்பொறுப்பாளர் பொட்டம்மான், மற்றும் புலிகளின் தளபதிகள் உள்ளிட்டவர்கள் 22, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தினர்.
ஆயுததாரிகளினால் படுகொலை
அதுதான் 22, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தலைவரின் முதல் சந்திப்பு. இந்த சந்திப்பின்போது நான் தலைவரிடம் கேட்டேன் கடந்த 2004, ஏப்ரல், 10, ஆம் திகதி கருணா குழுவினருடன் இடம்பெற்ற மோதலில் கருணாதரப்பில் மரணித்த போராளிகளை மாவீரர் பட்டியலில் இணைக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் இனவிடுதலைக்காக போராடவே இயக்கத்தில் இணைந்தார்கள் அவர்களை தவறாக கருணாதான் பயன்படுத்தினார் என்றேன்.
தலைவர் பதில் கூறுவதற்கு முன்னம் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் என்னிடம் கூறினார் அண்ணர் இந்த விடயங்களை எல்லாம் நாம் இங்கு கேட்ககூடாது என்றார்.
அப்போது உடனே தலைவர் தமது கையால் செ.கஜேந்திரனை பேசவேண்டாம். என சைகைகாட்டிவிட்டு” அரியம் அண்ணர் கேட்டதில் என்னதவறு உள்ளது அந்த போராளிகள் இனவிடுதலைக்காகத்தானே போராட்டத்தில் இணைந்தவர்கள் அவர்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது உண்மை .அரியம் அண்ணர் கேட்டது சரி அந்த போராளிகள் அனைவரையும் மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொள்கிறேன்” என்றார்.
இந்த செய்தி மறுநாள் கிளிநொச்சியில் இருந்து வெளிவந்த ஊடகங்களில் வெளியிடப்பட்டது. கடந்த 21, வருடங்களாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியால் வெருகல் படுகொலை என்ற பெயரில் இதனை நினைவு கூருகிறார்கள். ஆனால் இந்த உயிர் நீத்த அத்தனை போராளிகளும் தலைவரின் கட்டளைப்படி மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டு கார்த்திகை.27, இல் மாவீர்ர் தினநாளில் அவர்களுக்காகவுமே தீபச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படுகிறது என்பதே உண்மை. “வெருகல் படுகொலை” என வேறுபடுகொலை தினம் உண்டு.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் உள்ளவர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன். திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் 1986, காலப்பகுதியில் முதன்முதலாக ஓர் இடப்பெயர்வு இடம்பெற்றிருந்தது.
அந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை 1986.யூன்,12 அன்று சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் இராணுவம் மற்றும் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் அந்த படுகொலையையே “வெருகல் படுகொலை” என நினைவு கூருவது குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |