கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் திடீர் இடமாற்றம்! வடமாகாண பிரதம செயலாளர் நடவடிக்கை
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றி வந்த இராசயோகினி ஜெயக்குமார் உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026.05.04 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசனத்திணைக்கள பணிமனை நிர்வாக உத்தியோகத்தராக இடமாற்றம் செய்யப்படுவதாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திலிருந்து உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பணியாற்ற முடியாத நிலை
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் ஆளுநரின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்படுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கச் சொத்துக்கள், அலுவலக ஆவணங்கள், திறப்புக்கள், கணினி கடவுச்சொற்கள் மற்றும் அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் துறைத் தலைவர் அறிவுறுத்தும் அதிகாரியிடம் முறையாக ஒப்படைத்து, புதிய பதவியில் பொறுப்பேற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் இமக்குலேற்றா புஷ்பானந்தம், செயலாளரின் எதேச்சதிகாரமான செயற்பாடுகள் மற்றும் தவிசாளரின் கடமைகளிலும் தலையீடு இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டி, அவருடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநருக்கு உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக கடிதம் அனுப்பியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், குறித்த செயலாளரை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 30.04.2026 ஆம் திகதி தனது பதவியை விட்டு விலகத் தீர்மானித்திருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
