கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் வன்முறையில் ஈடுபட்ட உறுப்பினருக்கு எதிராக மனு கையளிப்பு
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் வன்முறையில் ஈடுபட்ட உறுப்பினர், மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதேச சபை உறுப்பினர்களால் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு, இன்று(07.01.2026) பிரதேச சபை தவிசாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச சபையில் கடந்த 31.12.2025 அன்று இடம்பெற்ற சபை அமர்வில், சபை உறுப்பினர் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதோடு, அரச சொத்துக்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
இதன்போது, தவிசாளர் கட்டுப்படுத்த தவறியதனால் வன்முறை சம்பவம் நீண்டநேரம் தொடர்ந்துள்ளது.

இதனை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்கள், மனு ஒன்றினை சபை தவிசாளர், உள்ளூராட்சி ஆணையாளரிடம் கையளித்துள்ளதுடன், ஊடகங்களுக்கும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
மனு கையளிப்பு
கையளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்படுவதாவது,
மக்கள் பிரதிநிதிகளான உயரிய சபையின் உறுப்பினர்கள் ஆகிய நாம், தங்களின் மேலான கவனத்துக்கும் உரிய கௌரவ நடவடிக்கைக்கு கொண்டு வரும் விடயம் என்னவென்றால், கடந்த 31.12.2025 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில் நடைபெற்றமை யாவும் தாங்கள் சபையின் தலைமை அதிகாரியாக நேரடியாக பார்த்து அவதானித்தவை என்பதை தாங்களும் உணர்வீர்கள் என நாங்களும் அறிவோம்.
சபை அமர்வுகளில் வாத பிரதிவாதங்கள் வருவது வழமையும் தேவையானதுமே. ஆனால் அதன் முடிவு வன்முறை அல்ல, மக்களுக்கு ஆரோக்கியமான சேவையாக அமைய வேண்டும். இதற்காகவே மக்கள் எங்களை அனுப்பி வைத்தார்கள்.
இருந்த போதும் அன்றைய கூட்டத்தில் உறுப்பினர் சயான் அவர்கள் எம்மோடு வன்முறையாக நடந்து கொண்டார்.
அதாவது அநாகரிகமான முறையில் மேசைக்கு மேலாக பாய்ந்து கண்ணாடி குவளையை உடைத்து தாக்க முற்பட்டமை மட்டுமல்லாது சபைக்கு சொந்தமான பொதுச் சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்தியிருந்தார்.
இதனை தாங்கள் நேரடியாக பார்த்துக்கொண்டே இருந்தீர்களே தவிர, இதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? சபையை கட்டுப்படுத்துமாறும் உரிய கௌரவத்தை பேண விரைந்து கட்டளையோ நடவடிக்கையோ மேற்கொள்ளுமாறு உறுப்பினர் குணசிங்கராசாவால் கூறப்பட்டது அதற்குத் தாங்கள் அமைதி காத்ததன் காரணம் என்ன?
என்.பி.பி கட்சிக்கு ஆதரவளித்த உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களைக் காப்பாற்ற முயல்வது சரியானதா? இதுதான் தங்கள் ஜனநாயகமா? இவை தொடர்பாக உறுப்பினர்களுக்கு கூறிய பதிலென்ன? சபையின் மீது அதி திருப்தியிலுள்ள மக்களுக்கு பொதுவெளியில் கூறப்போகும் பதில்கள் என்ன?
இந்த நிலையில், 20.01.2026 திகதி கூட்டம் நடத்த இருப்பதாக அறிய முடிகின்றது. நாங்கள் சபை அமர்வில் கலந்து கொள்வது என்றால் எங்களுடைய பாதுகாப்புக்கு யார் பொறுப்பு.
மீண்டும் வன்முறை ஏற்படாது என்பதற்கு தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் எவை? அல்லது மீண்டும் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதா? நல்லதோ கெட்டதோ சபையை வழிநடத்துகின்ற பொறுப்பு தங்களிடம் காணப்படுவதனால் இதற்கு சரியான பதில் தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினை சேர்ந்த உறுப்பினர்களுமாக 10 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
பிரதி:-
01)பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் முல்லைத்தீவு (தகவலுக்காவும் அரச சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலுக்காகவும்)
02)செயலாளர் கரைதுறைப்பற்று பிரதேச சபை ( ஆவணத்திற்காகவும் தொடர் சாட்சிக்காகவும்)
03) பொலிஸ் பொறுப்பதிகாரி முல்லைத்தீவு (சபையினதும் உறுப்பினர்களதும் பாதுகாப்பிற்குமாக)
கண்டனம் தெரிவித்த உறுப்பினர்கள்
மனுவை கையளித்த பின்னர் உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கரைதுறைப்பற்று பிரதேசசபையில் கடந்த 31.12.2025 அன்று இடம்பெற்ற சபை அமர்வில் உறுப்பினர் ஒருவர், சபையின் நாகரிக தன்மைக்கு முரணாக, அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் பெறப்பட்ட அரச சொத்துக்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார்.

இது தொடர்பாக அன்றைய கூட்டத்திலே தவிசாளர் அவருடைய அதிகாரத்தினை பயன்படுத்தி கட்டுப்படுத்த தவறியதனால் வன்முறை சம்பவம் நீண்டநேரம் தொடர்ந்தது.
சபையிலே ஜனநாயகத்துக்கு முரணான முறையில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து அவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்க கோரி தவிசாளருக்கு சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மனுவை கையளித்துள்ளோம்.
அதன் பிரதியினை உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்திற்கும் சமர்பித்திருக்கின்றோம்.
இது தொடர்பாக தவிசாளர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் ஜனநாயக ரீதியாக எமது போராட்டம் தொடரும் ” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam