தேசிய மக்கள் சக்தி வசம் சென்ற கரைத்துறைப்பற்று பிரதேச சபை! தமிழரசை சாடும் பலர்..
முல்லைத்தீவு- கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தவிசாளர் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இன்று(22/12/2025) இடம்பெற்றுள்ளது.
இரகசிய வாக்கெடுப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியின் சின்னராசா லோகேஸ்வரன் கடந்த ஜீன் மாதம் வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் தவிசாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, வெற்றிடமாக காணப்பட்ட தவிசாளரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று(22) நடைபெற்றுள்ளது. அதில், 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தவிசாளர் தெரிவில், 13 உறுப்பினர்கள் இரகசியமான முறையில் வாக்கெடுப்பினை நடத்த ஆதரவு தெரிவித்த நிலையில், தவிசாளர் தெரிவிற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளது.

தவிசாளர் தெரிவு
இதன்படி, தமிழரசுக் கட்சி சார்பில் மிக்கேஸ் பிள்ளை ஜோன்சன் மோகனராஜா, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ், தேசிய மக்கள் சக்தி சார்பில் இமக்குலேற்றா புஸ்பானந்தன் ஆகியோர் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதில், இமக்குலேற்றா புஸ்பானந்தன் 10 வாக்குகளையும்,ஜோன்சன் மோகனராஜா 5 வாக்குகளையும் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் 6 வாக்குகளையும் பெற்ற நிலையில் பெரும்பான்மை வாக்குகள் பெறாத நிலையில் குறைந்த வாக்கினை பெற்ற தமிழரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டவர் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, இரண்டாம் தடவையாக இமக்குலேற்றா புஸ்பானந்தன், தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் ஆகியோருக்கு இடையிலான போட்டி இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டுள்ளது.
அதில், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இமக்குலேற்றா புஸ்பானந்தன் 14 வாக்குகளையும் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் 7 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்த வாக்கெடுப்பு அடிப்படையில், உள்ளூராட்சி ஆணையாளராக புதிய தவிசாளர் தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கரைத்துறைப்பற்று பிரதேச சபை அனைத்து மக்களின் முன்மொழிவுகளையும் ஏற்று சபையினை நடத்துவோம், மத்திய அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புக்களையும் ஏற்று கரைத்துறைப்பற்று பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதில் பாராபட்சம் இன்றி செயற்படுவோம், ஜனாதிபதியின் கொள்கையின்படி பாமர மக்களை முன்னேற்றுவோம் என புதிய தவிசாளர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் உறுதி எடுத்துக் கொண்டுள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபை தமிழரசுக் கட்சியினாலேயே பறிபோனது என சமூக செயற்பாட்டாளர் மற்றும் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சமூக செயற்பாட்டாளரின் ஆதங்கம்

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஒருவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தை தமிழரசுக் கட்சியானது புறக்கணித்து செல்கின்றது. இன்று அரச கட்சியினருக்கு வாக்களித்து தமிழரசுக் கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவோடு தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்திருப்பது மிக வேதனையான விடயம்.
இரத்த வடுக்கள் தெரியாதவர்களும், வெடியோசை கேட்காதவர்களும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இங்கே இருக்கின்ற சில நன்னடத்தை கெட்டவர்களின் வாக்குறுதிகளை நம்பி எமது கரைத்துறைப்பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்திக்கு தாரைவார்த்து கொடுத்திருக்கின்றார்கள்.
இது தாயக மண்ணிற்கு கிடைத்த பெரும் தோல்வியாகவே நான் கருதுகின்றேன். தாயக விடுதலை போராட்டத்திற்கு தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் கனவுகள் சற்றேனும் மதிக்காத தமிழரசுக்கட்சி ஈழத்தின் இதய பூமியில் வேறுகட்சிக்கு ஆட்சியமைத்து கொடுத்ததற்கு தமிழரசுக் கட்சியின் தலைமைக்கும், கட்சியினை சேர்ந்தவர்களுக்கும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பில்லாத தலைமைகள்
அதேப்போன்று கரைத்துறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா கூறுகையில்,
அதிக வாக்குகளை பெற்று ஆளும் கட்சி தவிசாளர் பதவியினை கைப்பற்றியது தமிழரசுக் கட்சியின் சுயநலத்தை காட்டுகிறது. இன்று இந்த தமிழ் மண்ணை இழந்ததற்கு காரணம் தமிழரசுக் கட்சி தான். இவர்கள் வீட்டுக்குள் இருந்து அரசியல் நடத்திக்கொண்டு, உல்லாச படகுகளை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் தவராசா அமலன் கருத்து தெரிவிக்கையில்,
கரைத்துறைப்பற்று தவிசாளர் தெரிவில் தமிழரசுக் கட்சி இந்த சபையை இழந்திருக்கின்றது. ஏனெனின் தமிழரசுக் கட்சியின் தலைமைகள் முல்லைத்தீவில் இருக்கும் ஒரு நபரின் கதையினை கேட்டு செயற்பட்டுள்ளனர்.
இதனால் தான் இன்று இந்த சபை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் சென்றிருக்கிறது. தேசியம் கதைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியில் குளிர்காய்ந்து கொண்டு இருக்கும் ஒரு சிலர் தான் தலைமைகள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக தகவல் - ஷான்






