கன்னியா புதிய கட்டுமானத்தால் தமிழர்களுக்கு வரப்போகும் புதிய சிக்கல் - தமிழரசுக் கட்சி உறுப்பினர் எச்சரிக்கை
இலங்கை நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அநுர அரசாங்கம் தற்போது கடந்த கால அரசியல் தலைவர்கள் போன்று நடந்தக் கொள்வது வறுத்தமளிக்கின்றது என்றும் அரசை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(22.07.2026) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கட்டுமானத்தால் வரும் புதிய சிக்கல்
மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,
எமது அடையாளம், கலாசாரம், வரலாறு ஆகியவற்றை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், எமது முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்த தமிழர் பாரம்பரியமும் வரலாற்றுச் செல்வமும் நினைவுக்கு வருகின்றன.

அந்த மரபையும், அதற்கான அறிவையும், அதனுடன் தொடர்புடைய எமது நிலங்களையும் பாதுகாத்து, வருங்காலத்தில் எமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளிடம் ஒப்படைப்பது எமது பொறுப்பாகும்.
கன்னியா வெந்நீரூற்றுகள் தொடர்பாக நான் கடந்த நேர்காணலில் கூறியதுபோன்று, எமது சிங்கள மற்றும் முஸ்லிம் சகோதர சமூகங்களுடன் நாம் பரஸ்பர மரியாதையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகிறோம்.

அந்த நல்லுறவை எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலும் அல்லது வெளிப்புற தலையீடும் சீர்குலைக்க வேண்டிய அவசியமில்லை, குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் அது ஒருபோதும் நிகழக்கூடாது.
ஒரு தமிழனாக, என் மக்களின் உரிமைகளையும், அவர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான நீதியான குரலையும் நான் தொடர்ந்து உயர்த்துவேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.