கன்னியா பிள்ளையார் ஆலய காணி விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க நேரில் ஆய்வு
தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள திருகோணமலை, கன்னியா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் ஆலயத்தின் காணியை இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு இன்று (04) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் விஜயம் செய்துள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தினால் அகழ்வு பணிகள்
கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

நீண்டகாலமாக பிள்ளையார் ஆலயம் இருந்து வந்த நிலப்பகுதியை தொல்பொருள் திணைக்களம் தற்போது கையகப்படுத்தியுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனின் விசேட வேண்டுகோளுக்கிணங்கவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது, குறித்த காணி கையகப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கேட்டறிந்துள்ளார்.
காணியை மீளப்பெற்ற நடவடிக்கை
இதனை தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக கையாள்வது குறித்தும், நீதிமன்றத்தை நாடி குறித்த காணியை மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மக்களின் வழிபாட்டு உரிமையையும், வரலாற்று அடையாளங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.
கோயிலுக்குள் இருந்த விகாரை
இதன்போது, ஊடகங்களுக்கு சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தொடர்பில், சில வருடங்களுக்கு முன்னதாக பிரச்சினைகள் இருந்தது அனைவருக்கும் தெரியும். அங்கிருந்த பிள்ளையார் கோயிலை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளதுடன், கோயில் மேடையில் பௌத்த கொடி நாட்டப்பட்டு, தொல்லியல் திணைக்களத்தினால் எந்தவித கட்டுமானமும் செய்ய முடியாது என கூறப்பட்டது.
இதுபோன்று, விகாரை ஒன்றை கட்டுவதற்கான முயற்சி எடுக்கபட்ட விடயம் 2019ஆம் இடம்பெற்றது. அப்போது, நாங்கள் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அந்த நிலத்துக்கு சொந்தமான திருகோணமலையில் உள்ள இன்னொரு கோயில் உரிமையாளர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இடைக்கால தடை ஒன்றை பெற்றுக் கொடுத்தார்.
இதன்போது, கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பதற்காக இறுதியில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இது தொடர்பான சில நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்திய போது அதில் பண்டைய விகாரை இருந்ததாக அடையாளம் காட்டப்பட்டது.
பிள்ளையார் கோயில் 150 வருடங்கள் இருந்ததாக ஆதாரங்கள் இருந்த வேளையில், 2000 ஆண்டுக்கு முன்னதாக விகாரை இருந்ததாகவும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டது. பண்டைய விகாரை அங்கு இருந்திருந்தால் அதனை பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு தொல்லியல் திணைக்களத்துக்கு இருக்கிறது.
ஆனால் மீள கட்டுமானம் எதுவும் செய்ய முடியாது. ஆகவே பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை அவர்கள் செய்யலாம் எனக் தெரிவிக்கப்பட்டது.
காணி உரிமையாளரின் முறைப்பாடு
அதேவேளையில் 150 வருடங்களாக பிள்ளையார் கோயில் அங்கு இருப்பதால் அந்த இடத்தில் இன்னொரு அளவீடு செய்யப்பட்டு இடம் அடையாளப்படுத்தப்பட்டு அதில் பிள்ளையார் கோயில் மீளவும் கட்டலாம் என நீதிமன்றத்தில் இணக்கப்பாட்டோடு குறித்த வழக்கு முடிவுக்கு வந்தது.
இந்த இணக்கப்பாட்டுக்கு மாறாக அந்த நடவடிக்கைக்கு முரணாக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
இது தொடர்பில் காணி உரிமையாளர், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த பின்னர், வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக இருந்த அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். பண்டைய விகாரை இருந்ததாக சொல்லப்படும் மேட்டினை பேணிப் பாதுகாப்பதற்கு மேலதிகமாக வேறு சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
ஆகவே இந்த விடயம் சம்மந்தமாக நீதிமன்றத்தின் இணக்கப்பாட்டுக்கு மாறாக தொல்பொருள் திணைக்கள அனுமதியோடு நடைபெறுவதன் காரணமாக நீதிமன்றுக்கு இதனை தெரியப்படுத்துவது என்று தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்- ரொஷான்