கஞ்சிபானை இம்ரான் தப்பித்து செல்ல உதவிய சட்டத்தரணிகள்
கஞ்சிபானை இம்ரான் நாட்டில் இருந்து தப்பித்து செல்ல உதவியது அவருடைய சட்டத்தரணிகள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு யுத்தத்தின் பின்னரும் சமூகத்தில் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதே காரணம் என மக்கள் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இன்று (18) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லங்காசிறி ஊடகத்தின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரியிடம் எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அதுருகிரிய சம்பவம்
“இப்போது மக்கள் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் எதுவும் நடக்காதது போல் பேசுகிறார்கள். நான் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். கிராமம் கிராமமாக நகரம் நகரமாக சென்று மக்களிடம் கேளுங்கள்.
பொதுமக்கள் முன்பு போல் போதைப்பொருளுக்கு அடிமையா என்று கேளுங்கள். போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக இன்னும் கடுமையாகச் செயல்படுவோம்.
அதுருகிரிய சம்பவத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்களில் பலரை கைது செய்துள்ளோம். இன்னும் இரண்டு பேர் மீதமாக உள்ளனர் என நினைக்கிறேன்.
விடுதலைப் புலிகளின் போருக்குப் பிறகு ஆயுதங்கள் வெளிவந்தமையே இதனை இன்னும் கட்டுப்படுத்த முடியாதுள்ளது.
கஞ்சிபானை இம்ரான்
கஞ்சிபானை இம்ரான் மற்றும் கணேமுல்ல சஞ்சீவ எவ்வாறு நாட்டைவிட்டு தப்பித்தார்கள் என்பது அவர்களுடைய சட்டத்தரணிகளுக்கு நன்றாகவே தெரியும்.
போதைப்பொருள் பணத்தில் தங்கியிருக்கும் சட்டத்தரணிகள் குழு ஒன்று நாட்டில் உள்ளது. எல்லா சட்டத்தரணிகளும் அப்படி இல்லை .
சிலர் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் போதைப்பொருள் வழக்குகளுக்கு முன்னிலையாவதில்லை. கஞ்சிபானை இம்ரானும் கணேமுல்ல சஞ்சீவாவும் வழக்கறிஞர்களை வைத்தே நாட்டைவிட்டு வெளியேறினர்.
எம்பிலிபிட்டிய துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு தொடர்பாக, நேற்றைய நிலவரப்படி, நாங்கள் ஏற்கனவே கைது செய்துள்ளோம்.
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ‘ஜோண்டி’ என அழைக்கப்படும் தம்மிக்க நிரோஷன, செவ்வாய்கிழமை (16) இரவு அம்பலாங்கொடையில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிகள் தொடர்பான தகவல்
எனவே, இந்த சம்பவங்கள் நடக்கின்றன. சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதில் எங்களுக்கு சிக்கல்கள் உள்ளன.
எல்லா இடங்களிலும் துப்பாக்கிகள் உள்ளன என்று பொலிஸ்மா அதிபர் இன்று கூறினார்.
துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு பல தடவைகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஆனால் அவ்வாறான தகவல்கள் அரிதாகவே வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட விரோத துப்பாக்கிகள் தொடர்பில் எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றி தகவல்களை வழங்க முன்வருமாறுங்கள்
இதை இன்று சொல்கிறேன். தாய், தந்தையருக்குக் கூட நான் சொல்ல வேண்டியது என்னவென்றால், உங்கள் பிள்ளைகளின் கைகளில் ஏதேனும் ஆயுதங்களைக் கண்டாலோ அல்லது அவர்கள் ஆயுதம் வைத்திருப்பதை நீங்கள் கண்டாலோ, உங்கள் பிள்ளை குற்றவாளியாக மாறுவதற்கு முன், தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
ஆயுதங்கள் இருக்கும் இடம் பற்றி யாருக்காவது தெரிந்தால், தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்தவும். இரண்டு தடவைகள் இவ்வாறான தகவல்களுக்கு வெகுமதிகளை வழங்குவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளன.
இருப்பினும், துரதிஷ்டவசமாக இந்த நாட்டில், அவ்வப்போது நாட்டுக்குள் நுழைந்த துப்பாக்கிகளும், உள்நாட்டு போரின் பின்னர் வெளிவந்த துப்பாக்கிகளும் எல்லா இடங்களிலும் உள்ளன.
நாட்டை விட்டு தப்பியோட்டம்
எவ்வாறாயினும், அண்மைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் எதுவும் தீர்க்கப்படாமல் விடப்படவில்லை. சிலர் நாட்டை விட்டு வெளியேறினாலும் ஒவ்வொரு வழக்கு தொடர்பாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இவை ஒவ்வொன்றும், இன்றுவரை இந்த துப்பாக்கிச் சூடு எதுவும் தீர்க்கப்படாமல் விடப்படவில்லை.
அந்த ஒவ்வொரு சம்பவத்திலும், கைது செய்ய வேண்டிய ஒவ்வொரு நபரையும் நாங்கள் கைது செய்துள்ளோம்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு ஓரிருவர் நாட்டை விட்டு ஓடிவிட்டனர். நாட்டை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம்.
நாங்கள் இந்த நடவடிக்கையைத் தொடரும்போது, வெளிநாட்டில் பதுங்கியிருப்பவர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |