முகாமிற்கு சென்ற கனிமொழி! அகதிகள் பெருமிதம்
தூத்துக்குடியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலுள்ளவர்களை நேரில் சென்று பார்த்த கனிமொழி, அவர்களிற்கு நிவாரணப் பொருட்களும் வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, குளத்துள்வாய்பட்டி, மாப்பிளையூரணி ஆகிய 3 இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது.
இதில், தாப்பாத்தியில் செயல்பட்டு வரும் இலங்கை அகதிகள் முகாமிற்குத் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, நேரில் சென்றுள்ளார். அங்குள்ள மக்கள் கைதட்டி, ஆரவாரம் எழுப்பி அவரை வரவேற்றுள்ளார்.
முகாமிலுள்ள பெண்கள், அவரவர் வீடுகளுக்கு அழைத்துள்ளனர். ஒவ்வொரு வீடாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
அப்போது, முகாமில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு, கனிமொழி 500 ரூபாய் வழங்கியுள்ளார்.
அம்முகாமிலுள்ள 475 குடும்பத்திற்கு கோவிட் நிவாரணமாக தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறித் தொகுப்புகளை வழங்கியுள்ளார்.
பின்னர், கழிப்பறை வசதிகள், தாழ்வாகச் செல்லும் மின் வயர்கள், கூடுதலாகக் குப்பைத் தொட்டிகள், தண்ணீர் தேக்கத் தொட்டிகள் அமைக்க வேண்டும் எனப் பல கோரிக்கைகளை அம்மக்கள் முன்வைத்துள்ளனர்.
தாப்பத்தி இலங்கை அகதிகள் முகாமின் நிர்வாகக்குழு செயலாளர் அருள்ராஜ் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த முகாமில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமே தவிர எங்களை இதுவரைக்கும் எந்த தலைவருமே வந்து சந்தித்ததில்லை. எங்களுடைய குறைகளைக் கேட்டதுமில்லை. எம்.பி. என்கிற முறையில் முதல் தடவையா கனிமொழி மேடம்தான், எங்களை வந்து சந்தித்தது மட்டுமில்லாமல், அரிசி, காய்கறித் தொகுப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
இதை ரொம்ப பெரிசா நினைக்கிறோம். தமிழ்நாட்டில் முகாமில் பதிவு செய்யாமல் வெளியில் வசிக்கும் 13,513 குடும்பத்திற்கும் அரசின் கோவிட் நிவாரணத்தொகை ரூ.4,000 வழங்கியதற்காகத் தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.
காவல்நிலையங்களில் பதிவு செய்து ரேசன் அட்டை பெறாமல் இந்த முகாமில் 15 குடும்பங்கள் இருக்கின்றனர். இவர்களைப் போல தமிழகம் முழுவதும் உள்ள முகாம்களில் தனிக்குடும்பமா வசித்துக்கொண்டு வருகிற குடும்பத்தினருக்கும் அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கையையும் முன் வைத்தோம். முகாம்களில் பலரும் டிப்ளமோ, டிகிரி முடிச்சிருக்கிறார்கள்.
தனியார் நிறுவனங்களில் வேலைக்குப் போனால்கூட ’அகதி’ன்னு தெரிந்ததும் வேலை இல்லை, வேற நிறுவனத்தை பாருங்கள் என்று சொல்லிடுறாங்க.
அதனால், தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேருகிறதுக்காக உதவி செய்யுங்கள் என மேடம் கிட்டக் கோரிக்கை வைத்துள்ளோம்.
அதோடு குடியுரிமை சம்பந்தமான கோரிக்கையையும் முன்
வைத்துள்ளோம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில்
இருக்கிறோம்“ எனத் தெரிவித்துள்ளார்.