கைவிடப்பட்ட நிலையில் கந்தளாய் பேராறு சிறுவர் பூங்கா! மக்களிடையே கடும் அதிருப்தி
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட அனைக்கட் பேராறு சிறுவர் பூங்கா, கடந்த அரசாங்க காலத்தில் ஒரு கோடி 95 இலட்சம் ரூபாய் செலவில் சிறுவர்கள் பொழுதுபோக்கு மற்றும் சமூக வளமாக நிர்மாணிக்கப்பட்டது.
ஆனால் இன்று, அந்த பூங்கா முற்றிலும் கைவிடப்பட்ட, பாதுகாப்பற்ற, மற்றும் தரமற்ற நிலையிலே காணப்படுவதால், அப்பகுதி மக்கள் கடும் கவலையும் அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.
பராமரிப்பு இல்லாமை
அதிக செலவில் கட்டப்பட்ட இந்த பூங்கா தற்போது ஆடுகள் மேயும் மேச்சல் நிலமாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் ஊஞ்சல்கள் உடைந்துள்ளன, அமரும் கதிரைகள் மற்றும் கொங்கிரீட் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன, மின் இணைப்பு இருந்தும் இருள் சூழ்ந்துள்ள நிலை, மேலும் பதினைந்து எல்இடி விளக்குகள், பாதுகாப்பு வேலிகள் ஆகியவை அடையாளம் தெரியாதோரால் திருடப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியளிக்கின்றது.
மேலும், தரமற்ற கட்டுமானப் பொருட்கள் மற்றும் பராமரிப்பு இல்லாமை, இந்த பூங்காவை வெறும் சில ஆண்டுகளில் சேதப்படுத்தி விட்டுள்ளன. காடு வளர்ந்ததால் பூங்கா பற்றைக்காடு, குப்பை மேடு, மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் தங்கும் இடமாக மாறியுள்ளது. அதிகக் கட்டணத்தில் கட்டப்பட்டும், இன்றோடு நிர்வாக அலட்சியத்தால் முற்றிலும் வீணாகி போனது குறிப்பிடத்தக்கது.
இதன் முதன்மை காரணமாக ஊழல், தரமற்ற ஒப்பந்தங்கள், அதிகாரிகள் மேற்பார்வை இல்லாமை, மற்றும் அரசியல் தொடர்ச்சியின்மை ஆகியவை காணப்படுகின்றன.
இந்நிலையில், மக்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்த்து, தற்போதைய கந்தளாய் பிரதேச சபை நிர்வாகம் இந்த பூங்காவை புனர்நிர்மாணித்து, முறையாக பராமரித்து, சிறுவர்கள் பயன்பெறும் வகையில் மீளச்செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.