கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் வழக்கு ஒன்றிற்காக ரூபா 2300 பணம் இலஞ்சமாக கேட்கப்படுவதாக முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
காதி நீதிமன்றம்
குறித்த முறைப்பாட்டிற்கமைய இன்று மாறுவேடத்தில் மருதமுனை பகுதியில் இயங்கி வந்த குவாஷி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் அருகில் காத்திருந்து இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிபதி மற்றும் மனைவியை கைது செய்தனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 2300 ரூபாவினை இலஞ்சமாக பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்ததுடன் சந்தேகநபர்கள் இன்று(19) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் மன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

காதி நீதிமன்றம் என்பது இஸ்லாமிய தனியார் சட்டத்தின் கீழ் திருமண விவாகரத்து மற்றும் குடும்ப விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாகும். இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு பகுதியாக காதி நீதிமன்றங்கள் உள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |