கொழும்பில் பொது மகனின் பொறுப்பற்ற செயலால் அரசுக்கு கோடி ரூபாய் நட்டம் - இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு
கொழும்பின் புறநகர் பகுதியில் நபர் ஒருவரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக அரசாங்கத்திற்கு கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக நீர்விநியோக பிரதான குழாய் ஏற்பட்ட வெடிப்பினால், 15 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபையின் உதவி பொது முகாமையாளர் குமுது விஜேகுணவர்தன தெரிவித்தார்.
லபுகம கலட்டுவாவ நீர்த்தேக்க சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மீகொட, கொடகம பிரதேசத்தில் மஹரகம வரையான நீர் விநியோக குழாயில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது.
நீர் விநியோகம்
இதன் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நீர் நுகர்வோர் குடும்பங்கள் சிரமங்களை எதிர்நோக்கியதாக உதவி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
விபத்து காரணமாக குழாய் சீரமைக்க செலவழிக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாய் இழப்பை, விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளரின் தனிப்பட்ட பணத்தில் இருந்து அல்லது காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் அவிசாவளையில் இருந்து ஹோமாகம நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி நீர் குழாய் மீது விழுந்துள்ளதமையினால் வெடிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.