கச்சத்தீவு மீண்டும் பேசு பொருளாகிறது! தமிழக சட்ட சபையில் சிறப்பு தீர்மானம்
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சுமத்தி, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தமிழகத்தில் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரச்சினை
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கச்சத்தீவு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது.
இந்தியா அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு 1974 ஆம் ஆண்டு இலங்கையுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, இலங்கையின் சொத்தானது.
எனினும் கச்சத்தீவு விட்டுக் கொடுக்கப்பட்டதால் தங்களது பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் மறுக்கப்படுவதாக தமிழக கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்கள்
இதன்போது, இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையிலேயே இன்று புதன்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வர இருக்கிறார்.
கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
