சர்ச்சையை ஏற்படுத்திய டில்வின் சில்வாவின் கருத்து.. கடல் கடந்து எழுந்துள்ள தீவிர கரிசனை
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து குறித்து இந்தியா தீவிர கரிசனை கொண்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டில் நடத்தப்படமாட்டாது என்றும், அது தொடர்பில் இந்தியாவிடம் இருந்து எதுவித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்றும் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி.கிளை திறப்பு நிகழ்வின்போது அதன் பிரதான செயலாளர் டில்வின் சில்வா கருத்து வெளியிட்டிருந்தார்.
முக்கிய அறிக்கை
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பில் இந்தியாவுக்கு எதுவித ஆட்சேபணைகளும் இல்லை என்ற டில்வின் சில்வாவின் கருத்து, தமிழ் மக்கள் மத்தியில் இந்தியா தொடர்பான எதிர்மறை கருத்துக்கள் உருவாக வழிசெய்துவிடும் என்று இந்திய தரப்பில் கருதப்படுகின்றது.

அதன் காரணமாக 13ஆம் திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் வலியுறுத்தும் வகையிலான கருத்து ஒன்றை இந்திய ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஊடாக வெளிப்படுத்தவோ, அல்லது அது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக அறிக்கையொன்றை வெளியிடவோ இந்திய தரப்பு உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் இந்தியத் தரப்பு தீர்மானித்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.